அரசின் திட்டங்களை உடைத்துவிட்ட வவுனியாத் தாக்குதல்


உயிர்வாழ வேண்டுமானால் சிறீலங்கா அரசு தொடுத்துள்ள போரை எதிர் கொண்டாக வேண்டும். போரை எதிர்கொள்ள வேண்டுமானால் ஆயுதந் தூக்க வேண்டும்.

அத்தேர்வையே அரசாங்கம் தமிழ் மக்களுக்கு விட்டு வைத்திருக்கிறது. அதுவே யதார்த்த நிலையாகும். அவ்வாறான சூழ்நிலையில் பழையதை மறந்து புதியவர்களை நாடும் இழிநிலை தமிழர்களுக்கு ஏற்படப் போவதில்லை.

இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் எப்போது தமக்கு விடுதலை கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்களே ஒழிய இராணுவத்தினருடன் சேர்ந்திருக்க விரும்புபவர்களாக இல்லை. சிறீலங்கா அரசாங்கங்களின் தலைவர்கள் அனைவருமே இனஒதுக்கல் கொள்கையையே கடைப்பிடித்தனர். கல்வி, வேலைவாய்ப்பு, பங்கீடு, நிலம் எனப் பல வழிகளிலும் தமிழருக்குப்பாகுபாடு காட்டினர். சிங்களவருக்கு ஒரு நீதியும், தமிழருக்கு ஒரு நீதியுமாக இனவெறி ஆட்சியை அவர்கள் நடத்தினர்.

தமிழரும் - சிங்களவரும் சேர்ந்து வாழ்வது எப்போதும் இயலாது என்ற நிலையை அரசாங்கம் உருவாக்கியிருந்தது. எதிர்காலத்தில் போரின் முடிவு இரண்டு நாடு என்ற நிலைக்கு வந்து விடும். எந்தவொரு நிலையிலும் இணைந்து கொல்ல முடியாதவாறு அரசு இனவெறிக் கோட்பாட்டை முன்நிறுத்தி தடை போட்டு விட்டது. எனவே அடுத்த கட்டத்தைப் போரே முடிவு செய்யப் போகிறது. போர் இப்போது தீவிரம் பெற்று விட்டது. போரின் இறுதி வெற்றி தமக்கே என இரு தரப்பும் கூறுகின்றன.

இதில் அரசு புலிகளின் பொறிக்குள் வீழ்ந்து விட்டதால், இனிவரும் காலங்கள் புலிகளுக்குச் சாதகமானதாகவே மாறப் போகிறது என்பது தெரிகிறது. இதனை நிரூபிப்பது போல அண்மையில் ஏற்பட்ட அக்கராயன் குளம், வன்னேரிக்குளச் சண்டைகள், எடுத்துக் காட்டுகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் மீது சூழ்ச்சிகரமான திட்டங்களை சிறீலங்கா அரசு முன்வைத்துள்ளது. இதனை நிச்சயமாக தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள். அவர்கள் தமது தேர்வை உறுதியுடன் எடுத்து விட்டனர். வன்னியில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளில் உள்ள மக்களை வவுனியாவில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வருமாறு சிறீலங்கா அரசு அழைப்பு விடுத்து சுமார் இருவாரங்கள் கடந்து விட்டன.

இருப்பினும் எவரும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இதுவரை செல்லவில்லை. இது தமிழ் மக்களின் உறுதிப்பாட்டை தெளிவாக்கியிருக்கிறது. தமிழ் மக்களை தமது பிடிக்குள் விழுத்தி அவர்களை இறைமையற்ற இனமாக மாற்றியமைக்கவே மகிந்த ராஐபக்ச விரும்புகிறார். அதுவே அவரது தேர்வாகவுள்ளது. அதன் வெளிப்பாடே இப்போதுள்ள இராணுவ வலிந்த தாக்குதல்களாகும். பல வழிகளிலும் வன்னியைச் சூழ்ந்து நிற்கும் அரச படைகள் தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள மக்கள் வாழ்விடங்கள் மீது எறிகணை வீச்சுக்களை ஏவுகிறது. இதன் மூலம் மக்கள் வெளியேறி தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருவார்கள் என இராணுவமும் அரசும் எதிர்பார்க்கிறது.

தமது உயிரை இழந்தாலும், உடமைகள் அழிந்தாலும் மானமுள்ள எந்தத் தமிழனும் தனது வாழ்விடத்தை விட்டு வெளியேற மாட்டான் என்பது போல, அந்த மக்கள் வெளியேறாது சிங்களத்தின் தாக்குதலில் இருந்து தம்மைப் பாதுகாக்கப் பதுங்குகுழிகளை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது சிறீலங்கா அரசாங்கத்திற்கு சொல்லப்பட்ட செய்தியாகும். அரசாங்கம் தனது முழுவளங்களையும் போருக்குள் சொலுத்தி தமிழ் மக்களை அழிக்கும் வழிவகைகளை செய்து கொண்டிருக்கிறது. தனது நாடு அனைத்து இனங்களையும் சரிசமனாகப் பாவித்து உதவுகிறது எனக் கூறுவது அப்பட்டமான பொய்யாகும். மகிந்த ராஐபக்சவின் இரண்டே முக்கால் ஆண்டுகால ஆட்சி தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை மேலும் பலம் பெறச் செய்திருக்கிறது.

போர் நிறுத்தத்தில் இருந்து விலகி, போரைத் தமிழர் மீது பிரகடனப்படுத்தி அவர்களை அகதிகளாக்கி அலைய விட்டிருப்பதிலே அவர் வெற்றி கண்டுள்ளார். இந்த இரண்டே முக்கால் ஆண்டு தமிழர்களைப் பொறுத்தவரை மனிதவதையாகவே உள்ளது. இக்காலங்களில் ஆட்கடத்தல், கைது, சித்திரவதை, கொலை, அச்சுறுத்தல் என பல்வேறு மனித உரிமை மீறல்கள் தமிழரை அடையாளப்படுத்தப்பட்டு நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.இதுபற்றிய விழிப்புணர்வு சர்வதேச மட்டத்தில் ஏற்பட்ட பின்னரும் கூட, இதனை நிறுத்த மகிந்த முன்வரவில்லை. மகிந்தவின் ஆட்சியில் ஆண்டுதோறும் ஆயிரத்து ஐநூறு பேருக்கு மேல் பலவந்தமாகக் கடத்தப்படுகின்றனர். அதே அளவிலானவர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்.

நாளாந்தம் ஐந்து பேர் கடத்தப்படுகின்றனர். மேலும் ஐந்து பேர் கொல்லப்படுகின்றனர். இவையாவும் இராணுவக் கட்டுப்பாட்டில் வாழும் தமிழர்களுக்கு ஏற்படும் நிலை. அந்த மக்கள் எப்போதும் அச்சமும் பீதியுமுடையவராக வாழும் அவல நிலைக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. அரசாங்கம் இந்த மக்களை அடிமைகள் போல் நடத்துகின்றது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழும் தமிழர் தமது அரசியல் வாழ்வுரிமைகளை இழந்து படைகளுக்கு அஞ்சி, நடுங்கி, அடிமை வாழ்வைத் தொடர்கின்றனர். பொதுவாக கிழக்கு மாகாணத்தில் இன்னமும் அவர்களால் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியவில்லை.

அங்கெல்லாம் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வன்னியில் சுதந்திரமாக வாழும் மக்களை வவுனியாவிற்கு இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருப்பது நகைப்பிற்கிடமானது.நாளாந்தம் 250 குடும்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடப்பெயர்வுக்கு ஆளாகி வருகின்றன என முல்லை அரசாங்க அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனிடையே கிளிநொச்சி மாவட்டத்தில் முப்பது சதவீதமான குடும்பங்கள் மீள இடம் பெயரத் தொடங்கியிருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே முல்லைத்தீவு மேற்குப் பகுதியில் இருந்து இடம் பெயர்ந்த மக்களும் கிளிநொச்சி மாவட்டத்திற்குள் இடம்பெயர்ந்த மக்களுமாக கிளிநொச்சி மையப் பகுதியில் செறிவான மக்கள் தொகை காணப்படுகிறது. இந்நிலையில் சிறிலங்கா வான்தாக்குதல்களையும் எறிகணை வீச்சையும் தீவிரப்படுத்தியிருப்பது மக்களின் அன்றாட வாழ்விற்கு பாதிப்பையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே வன்னிப்பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை எடுத்து வருவதற்கு ஓமந்தை இராணுவச் சோதனைச் சாவடியில் தடையும், இன்னொருபுறம் கெடுபிடியும் படையினரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

எனவே, வன்னி வாழ் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து சர்வதேச நாடுகள் அக்கறை கொள்ளாமல் இருக்க முடியாது. இந்நிலையில் தான் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் ஊர்திகள் வன்னி வருகை தர அரசாங்கம் தடை விதித்திருக்கிறது. இது ஒரு பொறுப்பற்ற செயல் இதனை உலகம் கண்டிக்க வேண்டும். வன்னியில் அவலப்படும் மக்களிற்கு பணியாற்ற உலக அமைப்பினருக்கு வழிதிறந்திருக்க வேண்டும். உள்நாட்டு வெளிநாட்டுத் தெண்டர் நிறுவனங்களின் ஊர்திகள் வன்னி வருவதற்கு அரசாங்கம் தடை விதித்திருப்பதன் மூலம் அரசாங்கம் வன்னிப் பகுதியில் பாரிய இராணுவ நடவடிக்கைகளினூடாக பாரிய அழிவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பது தெளிவாகிறது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா ஊர்திகள் தவிர வேறெந்த ஊர்திகளுக்கும் அனுமதியில்லை என அரசாங்கம் அறிவித்திருப்பதன் மூலம் தமிழ் மக்கள் மீது திணிக்கப்படும் அவலம் வெளிக்கொணர்வது தடுக்கப்படும் என அரசு நம்புகிறது. இப்போது சகல அரசசார்பற்ற நிறுவனங்கள் அனைத்தும் வன்னியிலிருந்து வெளியேற வேண்டும் என சிறீலங்கா அரசினால் உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.மக்கள் வவுனியா வராவிட்டால் அவர்களை எவ்வாறு வரவழைப்பது என தங்களுக்குத் தெரியும் என கூறும் அரசு அதன் முதற்கட்டமாக தீவிர வான் தாக்குதல் நடத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது. சிறீலங்கா அரசுப்படைகளின் கொடூரமான தாக்குதலை தமிழ் மக்கள் அனுபவித்திருக்கிறார்கள். எனவே ஒரு போதும் தமது வாழ்விடங்களைவிட்டு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு செல்ல வாய்ப்பில்லை.

இது அரசிற்கும் தெரியும் படை தரப்பிற்கும் தெரியும். எனவே, இந்த மக்களை எப்படியாவது இராணுவப் பகுதிக்குள் இழுத்துவிட வேண்டும் என்பதில் குறியாக நிற்கிறது. அரசு அது சாத்தியமல்லாத சூழ்நிலை உருவாகுமானால் அந்த மக்கள் மீது வான்தாக்குதல் மற்றும் எறிகணை வீச்சுக்களை நடத்தி அந்த மக்களிற்கு அச்சத்தை ஏற்படுத்தி தங்கள் பொறிக்குள் உள்வாங்கவே அரசுப் படைகள் முயல்கின்றது. ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல. இவ்வாண்டுக்குள் கிளிநொச்சி கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுமென சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஐபக்ச சொல்லியிருக்கிறார். நாச்சிக்குடா, வன்னேரிக்குளம், அக்கராயன் பகுதிகளில் முன்னகர்வு முயற்சியில் ஈடுபட்ட இராணுவத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்ட நிலைக்குப் பின்னரே இவ்விதமான கருத்தைக் கோத்தபாய சொல்லியுள்ளார்.

வீறாப்புப் பேசும் கோத்தபாய அக்கராயன் பகுதியில் சண்டையில் ஈடுபட்ட சிங்கள அதிரடிப்படையை ஏன் களத்தை விட்டு எடுத்தார் என்பதற்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. தனது இராணுவம் மேலும் முன்னேற முடியாது திணறுவது ஏன் என்பதற்கும் அவரால் பதிலளிக்க முடியாது. ஏனெனில் கடந்த இருமாதமாக படைக்கு ஏற்பட்ட இழப்பு எதிர்பார்த்ததைவிட அதிகமானது. இவ்வாறான சூழ்நிலையில் கிளிநொச்சியை இவ்வருட இறுதிக்குள் கைப்பற்றி விட முடியுமென கோத்தபாய எதிர்பார்ப்பது மக்களின் வாழ்விடங்களைத் தாக்கி அவர்களை கிளிநொச்சியில் இருந்து தங்களது பகுதிக்குள் உள்வாங்கி தாம் வெற்றி பெற்று விட்டதாக அறிவிக்கும் நாசகாரச் சூழ்ச்சித் திட்டமே.

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் வாழ்விடங்களை தாக்கி அவர்களது வாழ்விடங்களை ஆக்கிரமித்து அம்மக்களிற்கு அவல வாழ்வை ஏற்படுத்தியவர்களால் எவ்வாறு அம்மக்களிற்கு சுதந்திரமானவாழ்வை தரமுடியும் எனவே, சிறீலங்கா வவுனியாவிற்குள் மக்களை அழைப்பது ஏதோ ஒரு நாசகாரச் சதித்திட்டம் என்பதில் சந்தேகமில்லை. எனவே, அடுத்த கட்டமாக இந்தப் போரை எதிர்கொள்ள அவர்கள் தயாராகி விட்டனர் என்பதுவே இன்றைய நிலை. இதனைச் சரிவரப் புரிந்து கொண்ட சிறீலங்கா அரசு வன்னியில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் உள்ள மக்களை பழிவாங்கத் தயாராகி விட்டது என்றே கருத முடிகிறது.

இதேவேளை, விடுதலைப் புலிகளை இராணுவத்தால் ஒரு போதும் வெல்ல முடியாது என்ற பல ஆய்வாளர்களின் கருத்தை கடந்த வாரம் வவுனியாவில் நடைபெற்ற தாக்குதல் மெய்ப்பித்துள்ளது. அரசு இராணுவ நடவடிக்கையை விட்டு தமிழர்கள் கோருவதை நிறைவேற்றி அரசியல் வழிக்கு வருவதே இப்போது செய்யப்பட வேண்டியது.

- கலியுகன்

No comments: