இலங்கை தமிழர்களுக்காக நடிகர், நடிகைகள் மீண்டும் போராட்டம் நடத்த சத்யராஜ் அழைப்பு



இலங்கை தமிழர்களுக்காக நடிகர்-நடிகைகள் மீண்டும் போராட்டம் நடத்த சத்யராஜ் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை தமிழர்களுக்காக நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகத்தினர் ஏற்கனவே ஊர்வலம், உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தினர். தற்போது இன்னொரு போராட்டம் நடத்தவும் முயற்சிகள் நடக்கிறது.

கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக நடிக்கும் “ஞாபகங்கள்” படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடந்தது. இதில் பங்கேற்று நடிகர் சத்யராஜ் பேசும்போது கூறியதாவது:-

ஈழத்தில் தொடர் படுகொலைகள் நடக்கின்றன. விஜயன் என்ற சிங்கள மன்னன்தான் அங்கு முதலில் குடியேறினான், அதற்கு முன்பே இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்தனர்.

தமிழ்நாடும் இலங்கையும் ஒரே நாடாகவே இருந்தன. இலங்கை மண்ணுக்கு உரிமையானவர்கள் தமிழர்கள்தான். மலையக தமிழர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களை பின்னாளில் ஆங்கிலேயர்கள் இங்கிருந்து கொண்டு போய் விட்டனர்.

ஈழத்தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அவதிப்படுகின்றனர். அவர்களுக்காக அத்தனை தமிழர்களும் சேர்ந்து போராட வேண்டும். எல்லா அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அனைத்து அரசியல் கட்சியினரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

லண்டனில் 2 இலட்சம் தமிழர்கள் குழந்தை குட்டிகளோடு போராடியுள்ளனர். அவர்கள் நம்மை விட 10 மடங்கு வசதி படைத்தவர்கள். கனடா, சுவீடன் என எல்லா நாடுகளிலும் தமிழன் போராடுகிறான். நாம் அதை விட அதிகமாக போராட வேண்டும்.

திரையுலகை சேர்ந்தவர்கள் மீண்டும் ஒரு போராட்டம் நடத்த வேண்டும். தலைவர்கள் கலந்து பேசி இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். உலகம் முழுவதும் 8 கோடி தமிழர்கள் உள்ளனர். நம்மால் 3 இலட்சம் தமிழர்களை காப்பாற்ற முடியாவிட்டால் தலை குனிவு ஏற்பட்டு விடும்.

எனக்கு நாட்டுப்பற்று அதிகமாகி விட்டது. வெல்க ஈழம். வெல்க ஈழம். இவ்வாறு சத்யராஜ் பேசினார்.

No comments: