வன்னிக்குச் சென்ற உணவு லொறிகள் ஓமந்தையில் தடுத்து நிறுத்தப்பட்டன

omanthai.jpgகிளிநொச்சி மாவட்டத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை உணவுப் பொருட்களுடன் சென்ற 20 லொறிகளும் ஓமந்தை இராணுவ சோதனை நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

கடந்த 11 ஆம் திகதியே கிளிநொச்சிக்கான வாகனத் தொடரணி கடைசியாகச் சென்றது. அதன் பின் இரு தடவைகள் உணவு வாகனத் தொடரணி ஓமந்தை இராணுவ சோதனை நிலையத்திற்குச் சென்ற போதும் அவை வழிமறிக்கப்பட்டு வவுனியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன.

அதேநேரம், கிளிநொச்சி மாவட்டத்துக்கான உணவுப் பொருட்கள் விநியோகம் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வவுனியா மாவட்ட செயலகத்திற்கும் கிளிநொச்சி அரச அதிபருக்கும் அறிவித்திருந்தது.

இதனால் கடந்த 12 நாட்களாக உணவுப் பொருட்களுடன் வாகனத் தொடரணிகள் ஏதுமே செல்லாததால் அங்கு உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் அங்கு அனுப்பப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்ட போதும் பாதுகாப்பு அமைச்சு தடையைத் தளர்த்தவில்லை.

இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு 20 லொறிகள் வவுனியாவிலிருந்து கிளிநொச்சிக்குச் சென்ற போதும் ஓமந்தை இராணுவ சோதனை நிலையத்தில் அவை தடுத்து நிறுத்தப்பட்டதுடன் வவுனியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

படை அதிகாரிகளின் உத்தரவின் பேரிலேயே தாங்கள் இந்த லொறிகளை திருப்பியனுப்பியதாக ஓமந்தை சோதனை நிலையப் படையினர் கூறினர்.

இதனால் காலை முதல் மாலை வரை 20 லொறிகளும் அங்கு காத்திருந்துவிட்டு பின்னர் வவுனியாவுக்குத் திரும்பின.

தற்போது கிளிநொச்சியில் பெரும் போர் நடைபெற்று வருகையிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையிலும் உணவுப் பொருட்களுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

No comments: