கிளிநொச்சியில் பட்டினி அபாயம் அரச உணவுக் களஞ்சியங்கள் காலி! 3 வாரமாக நிவாரண உணவு இல்லை!! வவுனியாவிலிருந்து எடுத்து வருவதற்கு முயற்சி

போர் தீவிரமடைந்திருக்கும் வன்னியின் பிரதான மாவட்டமான கேந்திரப் பிரதேசமான கிளிநொச்சியில் உள்ள அரசாங்க உணவுக் களஞ்சியங்கள் எல்லாமே, வெறிதாகிவிட்டன காலியாகிவிட்டன. அதனால் நில புலங்களையும் வீடு வாசல்களையும் விட்டு வெளியேறி, பல தடவைகள், பல இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ள சுமார் ஒன்றரை இலட்சம் மக்களுக்கு கடந்த மூன்று வாரங்களாக நிவாரண உணவுப் பொருள் எதுவும் வழங்கப்படவில்லை!!
வவுனியாவில் உலக உணவுத் திட்டத்தினால் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள உணவுப் பொருள்கள் எடுத்துவரப்படாவிட்டால் பலர் பட்டினியால் மாளும் மிக அபாயகரமான நிலை ஒன்று உருவாகி உள்ளது.
போரினால் பாதிக்கப்பட்டு, உயிரைக் கையில் பிடித்துகொண்டு, மாறி மாறிப் பல இடங்களுக்குச் சென்ற மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்களையும் ஏனைய உடனடித் தேவைகளையும் வழங்கி வந்த மனிதநேய சர்வதேச மற்றும் அரச சார்பற்ற தொண்டு அமைப்புக்கள் வன்னியை விட்டு வெளியேறியதன் உடனடித் தாக்கம் இதுவென்று அவதானிகள் கருத்து வெளியிட்டனர்.
ஐ.நா. சார்பு தொண்டு நிறுவனங்கள் உட்பட சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அவற்றின் பாதுகாப்புக் கருதி, வன்னியை விட்டு வெளியேறவேண்டும் என்று அரசாங்கம் இம்மாதம் எட்டாம் திகதி அறிவித்திருந்தது. மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் 15 ஆம் திகதி வரை அவகாசம் விதித்தார்.
இத்தகைய சூழ்நிலையில், வன்னி மக்கள் தொண்டு நிறுவனங்களை வெளியேற வேண்டாம் என்று முற்றுகைப் போராட்டம் நடத்திய போதிலும் ஐ.நா.தொண்டர் அமைப்புகள் ஆகக் கடைசியாக இம்மாதம் 16 ஆம் திகதி வெளியேறின.அதன் உட னடித் தாக்கமாக நிவாரணப் பொருள்கள் கூட கிடைக்காத மிகவும் ஆபத்தான பட்டினிச் சாவு நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.
மிகவும் ஆபத்தான மனிதாபிமானப் பிரச்சினை உருவெடுத்துள்ள இன்றைய நிலை குறித்து கிளிநொச்சி அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் கொழும்பு வந்திருந்த சமயம் நேற்று அவருடன் தொடர்பு கொண்டு கேட்டோம்.
அவர் நிலைமையைப் பின்வருமாறு விளக்கினார்:
கிளிநொச்சி மாவட்டத்தில் அறுபது சத வீதமான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்து விட்டனர். மொத்தம் 1,42,000 பேர் தமது சொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்து வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று தங்கி உள்ளனர்.
அரச களஞ்சியங்களில் கையிருப்பில் இருந்த அத்தியாவசிய உணவுப் பொருள்கள் முற்றாகத் தீர்ந்துவிட்டன. அதனால் நிவாரண விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் செப்ரெம்பரின் முதல் வாரத்தில் நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் நிவாரணம் வழங்க முடியாத நிலையில் உள்ளோம்.
இது குறித்து அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளோம். உணவுப் பொருள்களை அனுப்ப அவர் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரச நிவாரணம் வந்து சேர்ந்ததும் இடம் பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்க உடன் ஏற்பாடு செய்யப்படும்.
இதற்குப் புறம்பாக உலக உணவுத் திட்டத்தின் உணவுப் பொருள்கள் வவுனியா களஞ்சியத்தில் உள்ள உணவுப்பொருள்களை கிளிநொச்சிக்கு எடுத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்தப் பொருள்கள் வந்து சேரும் பட்சத்தில் மக்களின் உணவுப் பிரச்சினைகள் ஓரளவு நீங்கும்.
கிளிநொச்சிச் செயலகம், கிளிநொச்சி ஆஸ்பத்திரி உட்பட முக்கிய அரசாங்கத் திணைக்களகங்கள் தொடர்ந்தும் கிளிநொச்சியிலேயே இயங்குகின்றன. பாடசாலைகளும் இயங்க ஆரம்பித்துள்ளன. இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பல பாடசாலைகளில் இருந்து அவர்கள் வெளியேறியதால் அவை இயங்க ஆரம்பித்துள்ளன என்றார் அரச அதிபர்.

No comments: