இந்தியா மீது ஈடில்லா அன்பு வைத்துள்ளார் பிரபாகரன்;சீமானின் உருக்கமான பேட்டி: தமிழன் எக்ஸ்பிரஸ்

"தம்பி' படத்தில் மாதவனின் சமூகக் கோபத்தையும், சீற்றத்தையும் பார்த்தவர்கள் மிரண்டு போய்தான் இருப்பார்கள். ஈழத் தமிழர் பிரச்சினையில் அப்படத்தின் இயக்குனர் சீமானின் கோபமும் அப்படித்தான் இருக்கிறது.
ஈழத்தை "எங்கள் தேசம்' என்றும், இந்தியாவை "நீ...', "உன் தேசம்' என்றும் அழைப்பதிலிருந்தே ஈழப் பிரச்சினை அவரை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. இயலாமையும், ஏக்கமும், சினமும், சீற்றமுமாய் வெளிப்பட்ட சீமானின் விரிவான பேட்டி:-
ஈழப் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகளின் நிலை பற்றிய உங்கள் விமர்சனம் என்ன?
விமர்சனமே வேண்டியதில்லை. இப்போது வந்துள்ள நிலைப்பாட்டுக்கு எல்லா அரசியல் கட்சிகளுமே வரவேண்டும் என்பதே என் போன்றவர்களின் விருப்பம். அதுக்காகத்தான் நாங்க இவ்வளவு காலமும் உழைச்சோம். எல்லோருக்கும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி ஒரே சமதளத்தில் இயங்கணும்னு. அது இப்போ நடந்திருக்கு. அதை எதற்கு விமர்சிக்கணும்? அது மகிழ்ச்சி தானே!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழர் பிரச்சினையில் ஆதரவாக வெளியிட்டுள்ள அறிக்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
"தமிழ் ஈழம் தவிர, தனிநாடு தவிர வேறு தீர்வு இல்லை' என்கிற நிலைப்பாட்டை எடுக்கிற அரசியல் கட்சிகள் உண்மையிலேயே அந்த மக்கள் குறித்து சிந்திக்கின்றன என்று அர்த்தம். "ஒருங்கிணைந்த இலங்கைக்குள் ஒரு அமைதிப் பேச்சுவார்த்தை, ஒரு மாநிலப் பகிர்வு, ஒரு அதிகாரப் பகிர்வு' என்று பேசுபவர்கள் எல்லாம் அரசியல் பண்ணுகிறார்கள் என்பதே என் கருத்து. ஏனென்றால் மாநில சுயாட்சி என்பது எல்லாம் இறையாண்மை மிக்க நாடாகக் கருதப்படுகின்ற இந்தியாவுக்குள்தான் சாத்தியமான விஷயம். இலங்கை போன்ற ஒரு மதத் தீவிர நாட்டில் இறையாண்மையே இல்லை; அப்புறம் எப்படி மாநில சுயாட்சி சாத்தியம்? தமிழர் பிரச்சினையில் சர்வதேச நாடுகளின் நிலைப்பாடு என்ன? தமிழ் ஈழம் ஒன்றைத் தவிர எங்களுக்கு வேறு தீர்வு கிடையாது என்பதைச் சொல்லி வருகிறோம். பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிஞ்சு போனபோது அதை யாரும் பிரிவினையாகக் கருதலை. அதே பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் பிரிஞ்சுபோனபோது அதையும் இவங்க பிரிவினையா கருதலை. ஸ்ரீலங்காவில் மொழி, இனம், மதம், பண்பாடு கலாசாரம், வாழ்வியல் அமைப்புகள் என்று எல்லா வழிகளிலும் தமிழர்கள் அங்கே மாறுபடுகிறோம். அதனால நாங்க தனியா ஒரு நாடு கேட்கிறதுல ஒரு பிரச்சினையும் இல்லை. 10 லட்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்ட கொசாவா இன்னைக்கு விடுதலை அடையும்போது நாங்க ஏன் விடுதலை அடையக்கூடாது? இதை நீங்க தமிழீழத்தில் வாழும் மக்களின் விடுதலையாகக் கருதக்கூடாது. உலகமெங்கும் பரவி வாழக்கூடிய 12 கோடி மக்களின் தேசிய இன விடுதலையாகத்தான் பார்க்கணும். உலகத்தில் எல்லா நாட்டு விடுதலைகளையும், புரட்சிகளையும் ஆதரித்த தேசங்களும், இயக்கங்களும், மனிதநேயமிக்க அமைப்புகளும் எங்கள் விடுதலையை மட்டும் தீவிரவாதமாகப் பார்க்கும் காரணம்தான் என்ன என்பது எங்களுக்கு இதுவரைக்கும் புரியவில்லை.
சர்வதேச நாடுகளை "கன்வின்ஸ்' பண்ண நீங்கள் முயற்சி எடுத்தீர்களா?
நாங்க சர்வதேச நாடுகளில் எல்லாம் போய் பேசறோம். அந்தப் பேச்சின் வடிவத்தை அந்தந்த நாட்டின் மொழிகளில் மொழிபெயர்த்து ஏடுகளில் போடச் சொல்கிறோம். அப்படித்தான் நாங்கள் எங்கள் குரல்களை எழுப்பி உலகத்தாரின் கவனத்தை, எங்கள் பக்கம் திருப்புகிறோம். இப்போது தமிழ்நாட்டில் எழுந்திருக்கிற இந்த இன எழுச்சி, சர்வதேசக் கதவைத் தட்டும்னு நினைக்கிறோம். உலக சமுதாயம் ஈழத்தமிழர் பற்றி ஒருமுறை மெளனமாகச் சிந்திக்கட்டும்னு நினைக்கிறோம். இந்த நெருப்பை அணையவிடாம ஏந்தி நாங்கள் எடுத்துச் செல்வோம்.
இலங்கைக்கு சீனா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் ஆயுத உதவிகள் செய்கிறதா?
இலங்கைக்கு ஆயுத உதவி செய்வதை நாங்கள் எதிர்க்கிறோம். சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா வந்தாலும் நாங்கள் அவர்களோடு சண்டையிட்டுக் கொள்கிறோம். தமிழீழத்தில் வாழும் எல்லா மக்களும் இந்தியாவைத் தங்கள் தந்தையர் நாடென்றே கருதுகிறார்கள். தன் ஆறரைக் கோடி சொந்த உறவுகளை வைத்திருக்கிற ஒரு நாடாகவே அவர்கள் இந்தியாவை மதிக்கிறார்கள். அதனால் இந்தியா பகை நாடாக மாறுவதை தமிழர்கள் விரும்பவில்லை. இப்போது பாகிஸ்தான்காரன் ஒரு நாளைக்கு ரெண்டு கப்பல் ஆயுதங்கள் அனுப்பறான். அதை இறக்காதேன்னு சொல்லணும். விடுதலைப் புலிகளையோ அதன் தலைமையையோ அழிச்சி ஒழிச்சிட்ட பிறகு, அந்தக் கருவிகளை வைத்து சிங்களவன் என்ன செய்வான்? அங்கிருக்கிற பாகிஸ்தானியை, அமெரிக்க துருப்புகளை வச்சிக்கிட்டு என்ன செய்வான்? அந்த ஆயுதங்களை இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தமாட்டான்னு நீங்க எப்படி நம்புறீங்க? 70 குண்டுகளை ஒரே நேரத்தில் வீசுகின்ற ஒரு பல்குழல் பீரங்கியை பாகிஸ்தான் கொடுத்திருக்குது. அங்கே மன்னாரிலிருந்து அடிச்சா, அது மதுரையில் வந்து விழும். இது இந்தியாவுக்குத் தெரியுமா? தெரியாதா? அதனாலதான் ஆயுத உதவி செய்யக்கூடாதுன்னு சொல்றோம்.
ஆனால் இந்தியாவிற்கு எதிரான மனநிலையில் பிரபாகரன் இருக்கிறார் என்கிறார்களே?
அது தவறு. பிரபாகரனும், ஈழ மக்களும் இந்தியாவின் மீது எத்தகைய அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லி மாளாது. ஆனால் இந்திய தேசத்து மீனவர்கள் 306 பேரை இதுவரை சிங்கள இராணுவம் சுட்டு வீழ்த்தியிருக்கிறது. இது அச்சுறுத்தல் இல்லையா? பிரதமர் சொல்லியிருக்கிறார். இனிமேல் செய்யவில்லை என்கிறார்கள். பாதுகாப்புச் செயலர் நாராயணன் முதல்வரிடம் உத்தரவாதம் தருகிறார், இனிமே நடக்காதென்று. அவர் டெல்லி போய் இறங்கவில்லை... சுட்டு வீழ்த்தி விட்டார்கள். கச்சதீவு எங்கள் சொத்து. அதில் மீன் பிடித்துக் கொண்டிருப்பவனை தனுஷ்கோடி வரை துரத்தி வந்து சுடுகிறான் என்றால், அது எல்லை தாண்டிய பயங்கரவாதம் இல்லையா? இதை ஏன் இந்தியா கண்டிக்கலை? உண்மையில் யார் அச்சுறுத்துவது? உன் தேசத்து மக்களை தினம் சுட்டு வீழ்த்திகிட்டிருக்கிறது இலங்கை இராணுவமா? இல்லை விடுதலைப் புலிகளா?
ஆனால் முன்னாள் பிரதமர் ராஜீவைக் கொன்றது விடுதலைப் புலிகள் தானே?
இந்தியா, தமிழீழம் மலர்வதை விரும்பாத ஒரு நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டதால் அதற்கு எதிராக என்னென்ன செய்யலாம் என்று யோசிக்கிறது. அதற்கு ஒரு முகமூடி இருக்கிறது. அது ராஜீவ்காந்தியின் மரணம். அப்படியென்றால் ராஜீவ்காந்தியின் மரணத்துக்கு பழிக்குப்பழி வாங்குகிறீர்களா? ஒரே வார்த்தையில் சொல்லுங்கள்; நாங்கள் அனைவரும் செத்து ஒழியத் தயார். இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். ராஜீவ்காந்தியின் மரணத்தைப் பேசுகின்ற பெருமக்களுக்கு தேசப்பிதா காந்தியின் மரணத்தைப் பற்றிப் பேச தைரியம் இருக்கா? அந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைக் குறை கூற தைரியம் இருக்கா? ராஜீவ்காந்தியின் அம்மா இந்திரா காந்தியை சுட்டு வீழ்த்திய சீக்கியர் பற்றி அந்த அம்மையாரின் நினைவு தினத்திலேயோ, பிறந்த நாளிலேயோ பேசுவதற்கு ஒரு காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்தவருக்காவது தைரியம் இருக்குதா?
காங்கிரஸ் தலைமையிலான அரசில் விடுதலைப் புலிகளை வெளிப்படையாக ஆதரிக்கின்ற பா.ம.க. போன்ற கட்சிகள் அங்கம் வகிப்பது இரட்டை வேடம்தானே?
இந்த மண்ணுக்கான அரசியல் வேறு; தமிழீழத்துக்கான அரசியல் வேறு. இந்த மண்ணுக்கான அரசியலை செய்து, வென்று செல்வாக்கில் இருந்தால்தான் நீங்கள் அந்த மண்ணுக்கான அரசியலைச் செய்ய இயலும். இப்போ திருமாவளவன்ற மிகப் பெரிய போராளியை நீங்க எடுத்துகிட்டீங்கன்னா அந்தக் கட்சியை, ஒரு சின்னம் பெற்ற அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்க்கப் போராடுகிற போராட்டமே அவருக்குச் சரியாக இருக்கு. கொள்கை அளவிலயோ, உழைப்பிலேயோ, தியாகத்திலேயோ நோக்கத்திலேயோ அவரை நீங்க யாரோடும் குறைச்சு மதிப்பிட முடியாது. ஆனா ஒரு அரசியல் கட்சியின் அங்கீகாரத்திற்கான போராட்டத்தில் அவர் அரசியல் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் பொதுப்பிரச்சினை என்று வரும்போது ஒன்றாகிறார்களா? ஒருமித்து வருகிறார்களா என்பதுதான் நமக்குத் தேவை.
நடிகர், நடிகைகள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அறிவித்திருக்கும் போராட்டம் பற்றி?
அது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். நான்தான் அதைச் செய்ய விரும்பி சரத்குமார் ஸார், பாரதிராஜா அப்பா உட்பட எல்லார்கிட்டேயும் பேசினேன். அடிப்படையில் அவங்களும் உணர்வுள்ள தமிழர்கள். அதனால் இது குறித்து நல்ல ஒரு புரிதல் இருந்தது. இது கடமை. தமிழன் காசில், உழைப்பில் தான் நாம வாழறோம். அவன் பணம் வேண்டும்; ஆனால் அவன் உயிர் வேண்டாமா என்கிற கேள்வி எழுது. சக தமிழனா இல்லைன்னாலும், சக மனுஷனா அவனது படுகொலைக்கு எதிராக நாம் குரல் கொடுப்பது நம் கடமை.
நெய்வேலி காவிரிப் போராட்டம், ஒகேனக்கல் உண்ணாவிரதம் போன்று இதையும் சிலர் அரசியலாக்கிவிட்டால்..?
இது உணர்வுப்பூர்வமான பிரச்சினை, உயிர்ப் பிரச்சினை என்பதால அப்படிச் செய்ய மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.
சந்திப்பு: நரேந்திரா கமல்ராஜ்

1 comment:

Unknown said...

If he has real maanan soodul sorani ,he should renounce Indian citizenship and then go and settle in eelam.