சாவுதான் என்றால்.....!

சிங்கள இனாவத அரசு தமிழ் மக்கள் மீது பாரிய இனஅழிப்பு நடவடிக்கையை தீவிரமாக முனைப்புப்படுத்தியுள்ளது. இது இன்று கூறித்தான் எவரும் புரிந்த கொள்ள வேண்டியதொரு விடயம் அல்ல. சர்வதேச சமூகம் புரிந்து கொண்டதானதொரு விடயம் தான் சர்வதேச சமூகம் இதனை வெளிப்படுத்தாமை அதன் அரசியல் சார்ந்த விடயமே தவிர புரிதல் சார்ந்த விடயம் அல்ல.

இதேவேளை, சிங்களப் பேரினவாத அரசின் இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிரான தமிழ் மக்கள் மிகவும் தீவிரமிக்கதான போராட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இதுவும் உலகம் அறிந்த விடயம் ஆகும். தமிழ் மக்கள் இப்போராட்டத்தை நடத்தாது போனால் இலங்கையில் தமிழ் இனத்தின் அடையாளம் இல்லாது போயிருப்பினும் கூட ஆச்சரியத்திற்குரிய தொன்றல்ல. இப்போராட்டத்தில் இன்று வன்னிப் பகுதியில் உள்ள குடும்பங்கள் யாவும் தமது பங்களிப்பை ஆற்றி வருகின்றன. குறைந்த பட்சம் வீட்டிற்கொருவர் என்ற ரீதியில் அவர்களின் பங்களிப்பானது காணப்படுகின்றது.

இதற்கும் மேலாக ஒரே குடும்பத்தில் ஒன்றிற்கும் மேற்பட்டோரும் போராளிகளாக உள்ளனர். இன்று சிங்களப் பேரினவாதம் மேற்கொள்ள முனையும் தீவிர இன அழிப்பு நடவடிக்கை இதன் காரணமாகவே மட்டுப்படுத்தப்பட்டதாகவுள்ளது. தியாகமும், அர்ப்பணிப்பும் மிக்கதான தமிழ் மக்களின் போராட்டப் பங்களிப்பு என்பது இனத்தைக் காப்பதில் பெரும் பங்காற்றுவதாகவுள்ளது. சிங்கள இன வாதஅரசு தனது நோக்கத்தை விரைந்து நடத்த முடியாததானதொரு சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

ஆனால் ஒவ்வொரு குடும்பத்திலும் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் இருப்பினும் சிங்கள இனவாத அரசு மேற்கொள்ளும் தீவிர இனஅழிப்பு முயற்சிகள் குறித்து பெரும் அச்சம் கொள்பவர்களாகவும் ஒரு தரப்பினரும் உள்ளனர். இவர்களில் பலர் அழிந்து போகவேண்டியதுதான் ஒரே வழி என்னும் வகையில் பெரும் விரக்தியிலும் உள்ளனர். இவர்கள் ஏன் இவ்வாறு எண்ணுகிறார்கள்.? அச்சப்படுகின்றார்கள்.? அவர்கள் ஒரு மர்ற்றுவழி குறித்துச் சிந்திக்க ஏன் மறுக்கின்றார்கள்.? காலத்தைச் சரியாக மதிப்பீடு செய்ய ஏன் முடியாது உள்ளனர்.?

அதாவது வீரம் மிகுந்ததானதொரு விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருக்கையில் இவர்கள் ஏன் அச்சப்பட வேண்டும்? சரி வீழ்ந்து போக வேண்டிதானதொரு சூழ்நிலை தான் உருவாகியுள்ளதெனில் ஏன் போராடி வீழ்ந்து போவதை விடுத்து கோழைகள் போல் தமது அழிவைப்பற்றிச் சிந்திக்க வேண்டும்.? எந்தவொரு உயிருக்கும் தனக்கு ஆபத்து நெருங்கும் போது தனது சீற்றத்தினையும் தனது எதிர்ப்புணர்வையும் காட்டாமல் அழிந்து போய்விடுவதில்லை. மனிதர்களில் மட்டும் தான் சாகும் தருணம் நெருங்கி வருகின்றதென்ற நிலை வரும்போது கூடப் பயந்து ஒடுங்குவோர் உள்ளனர்.

ஆனால் சாவுதான் உறுதி என நம்புபவர்கள் இறுதியிலாவது தமது எதிர்ப்பை வெளிப்படுத்தின் அவர்கள் எதிரிக்கு அழிவை உண்டாக்கலாம். அதேசமயம் தம்மைப்பாதுகாக்கும் வாய்ப்பையும் பெறுகின்றனர் அல்லது விடினும் கூட தனது இனத்திற்கான பங்களிப்பையாவது ஆற்றுவதாக இருக்கும். இதேசமயம் சிலர் வன்னிக்கு வெளியில் சென்றால் வாழ்விற்கு உத்தரவாதம் கிட்டிவிடும் என நம்புகின்றனர். வன்னியில் இன்று சிறிலங்கா இராணுவத்தின் மிலேச்சத்தனமான தாக்குதலில் கொல்லப்படுவோரை விட இலங்கையில் ஏனைய பகுதிகளில் சிங்களப்படைகளினாலும் ஒட்டுக்குழுக்களாலும் கொல்லப்படுவோர் அதிகமாகும். அங்கு முற்றிலுமாகவே தமிழரின் வாழ்விற்கு உத்தரவாதம் கிடையாது. இங்கிருப்பின் எதிர்ப்பையாவது காட்டுவதற்கு வாய்ப்புண்டு.

ஆகையினால் முதலில் அச்சம் தவிர்த்தல் வேண்டும் உயிர் அச்சம் என்பது அர்த்தமற்ற சாவையும் பயனற்ற சாவையுமே எமக்கு அளிக்கத்தக்கது. சாவுதான் எமக்கு எனக்கருதின் ஏன் போராடிச்சாக முற்படுதல் கூடாது? போராடத்துணிந்து விட்டால் சாவே எம்மைக் கண்டு ஒதுங்கிக் கொள்ளக்கூடும். ஆகையினால் தமிழ் மக்கள் இன்று அச்சம் என்பதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

போராட்டமே வாழ்க்கை என்று ஆகி விட்ட நிலையில் அதிலிருந்து விலகிப் போதல் என்பது வாழ்வைத்தரப்போவதில்லை. சிங்கள இனவாத அரசினைத் தோற்கடிப்பதே தமிழ் மக்களின் இருப்பை உறுதிசெய்யத்தக்கதாகும்.

நன்றி: உலகத்தமிழர்

No comments: