பொத்துவிலில் இரு தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொலை.

sri_army_paval.jpgஅம்பாறை மாவட்டம் பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சர்வோதயபுரம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் தமிழ் இளைஞர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 11மணியளவில் பொத்துவில் அக்கரைப்பற்று பிராதன வீதியின் அறுகம்பையில் இருந்து சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள சர்வோதயபுரம் தமிழ் கிராமத்திலேயே இந்த துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட இருவரும் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் என தெரிவித்த பொத்துவில் பொலிஸார் இவர்களிடம் இருந்து கைக்குண்டுகள் இரண்டும்,சயனைட் வில்லைகள் இரண்டும்,தமிழீழ விடுதலைப்புலிகளின் இலக்க தகடு ஒன்றும் மீட்க்கப்பட்டதாக தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் அப்பகுதியில் பதுங்கியிருந்த விசேட அதிரடிப்படையினர் இவர்களை சுட்டுக்கொன்றதாக பொத்துவில் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எம்.சுரவீர தெரிவித்தார்.

இது வரை சடலம் அடையாளங்காணப்படவில்லையென தெரிவித்த பொத்துவில் பொலிஸார் அடையாளங்காண்பதற்காக பொத்துவில் வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதேபோல்

கொழும்பு கொட்டாஞ்சேனை குணானந்த மாவத்தையில் கடந்த சனிக்கிழமை காலை தமிழ் இளைஞனொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சனி காலை 8.10 மணியளவில் இந்த இளைஞன் அந்த வீதியில் கராஜ் ஒன்றுக்குச் சமீபமாக நின்ற போது அவ்விடத்திற்கு மோட்டார் சைக்கிளொன்றில் வந்தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த கஜன் கோனேந்திரன் (22 வயது) என்ற இந்த இளைஞன் குணானந்தா மாவத்தையிலேயே தங்கியிருந்தார்.

மெழுகுவர்த்தி உற்பத்தி நிலையமொன்றில் கடமையாற்றி வந்த இவரது கொலைக்கான காரணம் குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை.

இவரது சடலம் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments: