தமிழக முதல்வரின் குரல் எமக்கு நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது: நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்


ஈழத் தமிழினத்திற்கெதிராக கொடிய இன அழிப்புப் போரினைக் கட்டவிழ்த்துவிட்டுவரும் சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராக தாங்கள் நெஞ்சுரத்துடன் குரல்கொடுத்துள்ளமை எமது இதயங்களில் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது என்று நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நோர்வே தமிழ் அமைப்பக்களின் ஒன்றியம் நேற்று வியாழக்கிழமை (09.10.08) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஈழத் தமிழினத்திற்கெதிராக கொடிய இன அழிப்புப் போரினைக் கட்டவிழ்த்துவிட்டு வரும் சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராக தாங்கள் நெஞ்சுரத்துடன் குரல் கொடுத்துள்ளமை எமது இதயங்களில் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.

கட்சி அரசியல் வேறுபாடின்றி தமிழகத்தின் அனைத்து சக்திகளும் தமிழீழ மக்களின் உயிர் காப்பிற்கும் உரிமை மீட்பிற்கும் ஒன்றுபட்டு குரலெழுப்ப வேண்டுமென்ற தங்களின் அழைப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயல் முன்னெடுப்பாகும்.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் நேர்ந்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு" என்ற பாவேந்தரின் புரட்சி மொழியை உங்கள் செயலில் காண்கிறோம். தமிழீழ மக்களின் காயங்களுக்கான ஒத்தடமாகவும், நாளைய விடியலுக்கான நம்பிக்கை ஒளியாகவும் அதனைக் காண்கிறோம்.

தமிழினத்தின் வேரறுக்கும் நோக்குடன் செயற்பட்டு வரும் சிங்களப் பேரினவாதமானது, அறுபது ஆண்டு கால இன அழிப்பின் உச்சமாக இன்று எமது மக்களின் குரல் வளைகளை நெரித்து நிற்கின்றது. குண்டு மழைக்குள்ளும் குருதி மழைக்குள்ளும், ஊரூராய் அலைகின்ற அவலங்களுக்குள்ளும் தோய்ந்துள்ளது எமது மக்களின் இன்றைய வாழ்நிலை.

நோர்வே அரசின் அனுசரணையுடன் சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியிலும் கூட அரசியல் தீர்வுக்கான அனைத்துக் கதவுகளையும் இறுக மூடியது சிறிலங்கா அரசாங்கம்.

ஆழிப்பேரலை பேரழிவுக்குப் பின்னரான மறுவாழ்வுப் பணிகளுக்கென இணக்கங்காணப்பட்ட கட்டமைப்பினையே உச்சநீதிமன்றத் தீர்ப்பு மூலம் தகர்த்தெறிந்தது.

தமிழர்களுக்கான மனிதாபிமான உதவிகளையே கங்கணங் கட்டி நின்று தடுக்கும் சிறிலங்கா பெருந்தேசியவாத ஆட்சியானது, எங்ஙணம் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை ஏற்றுக்கொள்ளும் என்பது வரலாற்றுப் பட்டறிவினூடாக தமிழீழ மக்களுக்கு இயல்பாக எழுகின்ற கேள்வியாகும்.

இந்த ஆண்டு ஜனவரியில் ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகியதோடு, இருதரப்பிற்கு மத்தியில் போர் நிறுத்தத்தைக் கண்காணிப்பதற்கென ஆறு ஆண்டுகளாக இலங்கைத் தீவில் நிலைகொண்டிருந்த ஸ்கன்டிநேவிய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களையும் வெளியேற்றியது.

இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு செப்ரெம்பர் மாத ஆரம்பத்தில் வன்னிப் பெருநிலப்பரப்பிலிருந்து ஐ.நா. உட்பட்ட அனைத்துலக அரச சார்பற்ற உதவி நிறுவனங்களும் வெளியேற்றப்பட்டுள்ளன.

தமிழர் தாயகப் பகுதிகளில் அனைத்துலக சமூகத்தின் பிரசன்னத்தை இல்லாமற் செய்வதனூடு, தமிழின அழிப்பைத் தீவிரப்படுத்துவதே சிங்கள அரசின் உள்நோக்கமென்பது வெள்ளிடை மலை.

தமிழீழ மக்கள் உலகில் நாதியற்ற இனம் அல்ல. தாய்த் தமிழகத்தில் எமது தொப்புள் கொடி உறவுகள் ஆறு கோடி தமிழர்கள் உள்ளனர். எமக்காக உரத்துக் குரல் கொடுக்கும் உறுதியோடு இன்று உணர்வலைகளை எழுப்பியுள்ள தமிழக உறவுகளுக்கு எமது பெருநன்றியை பகிர்ந்து கொள்கின்றோம்.

இந்திய அரசியல் விரிதளத்தில் நிராகரிக்க முடியாத முக்கியத்துவமுடைய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகின்றது என்பதை நாம் அறிவோம்.

எனவே

- இந்திய அரசு, சிறிலங்கா பேரினவாத அரசிற்கு வழங்கி வரும் படைய உதவிகளை நிறுத்த வேண்டும்

- சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்

- தமிழ் மக்களின் போராட்டம் தொடர்பான இந்திய அரசின் கொள்கை நிலைப்பாட்டில் சாதகமான மாற்றம் நிகழ வேண்டும்

- தமிழ் மக்களின் நியாயமான வாழ்வுரிமைக் கோரிக்கைகளுக்கு இந்தியப் பேரரசு ஆதரவளிக்க வேண்டும்

இதற்கான அழுத்தங்களைத் தாங்கள் தொடர்ந்து கொடுக்க வேண்டுமென உரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.

தமிழீழ மக்களின் உரிமைகளுக்கு ஆதரவாக உங்கள் ஆட்சியில் தமிழகம் கண்டுள்ள இந்த எழுச்சி, அரசியல் தளத்தில் தொடர் தாக்கங்களை விளைவிக்கவல்ல செயற்பாடுகளுக்கு இட்டுச்செல்லப்பட வேண்டுமென்பதே வாழ்வுரிமைக்காகப் போராடும் ஒட்டுமொத்த தமிழீழ மக்களின் பேரவா என்பதையும் இங்கு பதிவுசெய்து கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: