தமிழக மீனவர்கள் அனைவரும் படகுகளை எடுத்துக்கொண்டு இலங்கை செல்வோம். அங்குள்ள சிங்களர்களை ஒரு கை பார்ப்போம்--ராமதாஸ்

இலங்கையில் உண்மை நிலையை அறிய அனைத்து கட்சியை சேர்ந்த 10 பேர் எம்.பி.க்கள் குழுவை அனுப்புங்கள் என்று முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து, பா.ம.க. சார்பில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே. மூர்த்தி எம்.பி., பொன்னுச்சாமி எம்.பி., பாடலாசிரியர் அறிவுமதி, இயக்குனர் சீமான், ஓவியர் வீரசந்தானம் உள்பட பா.ம.க. எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

இலங்கையில் ஈழ தமிழர்களுக்கு, மனித உரிமை ஆர்வலர்கள் சொல்லும் அளவுக்கு கொடுமை நடக்கிறது. தமிழன் தூங்குகிறான். அங்கு போடப்படும் குண்டுகளின் சத்தம் முதல்-அமைச்சர் கருணாநிதியின் காதில் விழவில்லையா?.

நீங்கள் 5 முறை முதல்-அமைச்சராக இருந்துள்ளீர்கள். 6-வது முறையாகவும் நீங்கள் ஆளுவதற்கு நாங்கள் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். ஆனால், ஈழ தமிழகம் மலரும் என்று தீர்மானம் நிறைவேற்றுங்கள். தமிழக மீனவர்கள் அனைவரும் படகுகளை எடுத்துக்கொண்டு இலங்கை செல்வோம். அங்குள்ள சிங்களர்களை ஒரு கை பார்ப்போம்.

விடுதலைப்புலிகளை ஆதரித்ததால் அன்று மத்திய அரசு ஆட்சியை கலைத்துவிட்டதாக கூறினீர்கள். இப்போது, மத்தியிலும் உங்களது தயவில்தானே ஆட்சி நடக்கிறது. இப்போது அந்த பிரச்சினை குறித்து பேசவேண்டியது தானே?. அப்படி ஆட்சியை கலைத்தால் நாங்கள் சும்மா விட்டு விடுவோமா என்ன?. நீங்கள் வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். நீங்கள் பேசுவதை உலக தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். உங்கள் வாய் சொல்தான் அருமருந்து. உடனே, இலங்கை தமிழர் பிரச்சினையில் தலையிடுங்கள். முதல்-அமைச்சர் கருணாநிதி அவர்களே 10 நாட்களுக்குள் நல்ல முடிவு எடுங்கள்.

தி.மு.க. எம்.பி.க்கள், மற்றும் பா.ம.க., பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சார்ந்த எம்.பி.க்கள் அடங்கிய 10 பேர் குழுவை இலங்கையில் உள்ள வவுனியாவுக்கு அனுப்புங்கள். அவர்கள் அங்குள்ள உண்மை நிலையை கண்டறிந்து மத்திய அரசுக்கு சொல்லட்டும்.

தற்போது சீனாவிடம் இருந்து இலங்கை வாங்கியுள்ள ரேடார் கருவி முப்பரிமானம் கொண்டது. இது இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியை மட்டும் அல்லாமல், தென் இந்தியாவையும் காட்டிக் கொடுக்கும். அது முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும், உளவுப் பிரிவுக்கும் தெரியாதா?.

இன்னும் 10 நாட்களில் முடிவு எடுக்காவிட்டால் கருஞ்சட்டை படைகள் 1,000 பேர் ஒன்றிணைந்து சென்னை தீவுத்திடலில் தீப்பந்தம் ஏந்தி, ஈழ தமிழர்களுக்காகவும், தமிழ் ஈழம் விடுதலைக்காகவும் குரல் கொடுப்போம்.

மேலும், பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்குள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள். அவர்களை நீங்கள் உடனே கைது செய்து சிறையில் அடையுங்கள். விட்டு விடாதீர்கள். அடுத்து எங்கள் கட்சி எம்.பி.க்கள், இளைஞர் படையினர், மாணவர்கள் படையினர், மகளிர் படையினர் அனைவரும் உண்ணாவிரதம் இருப்பார்கள். அவர்கள் அனைவரையும் சிறையில் அடையுங்கள். இன்றைக்கு தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளும் சேர்ந்து, இலங்கை அரசை கண்டித்தும், தமிழ் ஈழத்தை ஆதரித்தும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் இந்திய அரசு ஒப்புதல் தரும்.

உடனே, ஈழ தமிழர் பிரச்சினைக்கு ஒரு நல்ல முடிவெடுங்கள். தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

No comments: