கொழும்பு பகுதிகளில் தமிழ் பிரஜைகள் கைது செய்யப்படுதல், காணாமல் போதல் சம்பவங்கள் மீண்டும் அதிகரிப்பு


வெள்ளவத்தைப் பிரதேசத்தில் தங்கியிருந்த மூவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை எனக்கூறி இராணுவ வீரர்களால் இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதன் பின்னரே இவர்கள் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.

சாவகச்சேரி சிவன் கோவிலடியைச் சேர்ந்த 25 வயதுடைய சின்னத்துரை சிவதீபன் , 50 வயதான கதிர்காமத்தம்பி பிரகலாதன் மற்றும் 20 வயதுடைய பிரகலாதன் துவாஹரன் என்பவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு வந்த 6 இராணுவ வீரர்களும் இவர்களை விசாரணைக்காக அழைத்துச் செல்வதாகவும், மறுநாள் காலை காவலநிலையங்களில் வந்து சந்திக்கும்படி உறவினர்களிடம் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் குறித்த வீட்டில் கடந்த முதலாம் திகதி முதல் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் வெளிநாட்டுக்கு செல்வதற்காக இங்கு வந்து தங்கியிருந்தனர். இந்தநிலையில் இவர்கள் வசம் சகல பதிவுகளும் இருந்தன. எனினும் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ள நிலையில் காணாமல் போயுள்ளதாக முறையிடப்படவுள்ளது.

இந்த நிலையில் அவர்கள் குறித்து காவற்துறையினரிடம் முறைபாடு செய்ய முற்பட்டபோதும் அவர்கள் அந்த முறைப்பாட்டினை ஏற்க மறுத்து விட்டதாகவும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் பிரதி அமைச்சர் பி இராதாகிருஸ்ணனிடம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கொழும்பு கிரேண்ட்பாஸில் கடந்த 6 வருட காலங்களாகத் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆறுமுகம் பிரதீப்குமார், ஆறுமுகம் திலீபன் ராஜ் ஆகிய சகோதரர்களைக் கிராண்ட்பாஸ் காவற்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மலையகத்தின் கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தை சேர்ந்த அருணாசலம் சக்திவேல் மற்றும் அக்கரப்பத்தனை அயோனாவைச் சேர்ந்த ராஜ் ஆகியோரும் சந்தேகத்தின் பேரில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: