இலங்கை தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுதி அறிக்கை விரைவில்


இலங்கை தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுதி அறிக்கை விரைவில் தயாரிக்கப்பட்டு ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்திடம் சமர்ப்பிக்கப்படுமெனத் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் முன்வைத்த அறிக்கை குறித்து கடந்த செவ்வாய்கிழமை ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் ஆராயப்பட்டது. இவற்றைக் கொண்டு இலங்கை தொடர்பாக இறுதி அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக் கொள்கைகள் பணிப்பாளர் நாயகம் பிலிப்பே கமாரிஸ் கொழும்பு ஊடகமொன்றிடம் கூறினார்.

கடந்த ஜுலை மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் தமது அறிக்கையை செப்டம்பர் மாதம் கையளித்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த அறிக்கை தொடர்பாக செவ்வாய்கிழமை ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட இலங்கைக்கான தூதுவர், இலங்கை தொடர்பாக பக்கச்சார்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருப்பதுடன், இலங்கை குறித்துப் பிழையான எண்ணத்தைத் தோற்றுவிப்பதற்கான முயற்சிகள் அந்த அறிக்கை மூலம் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இவற்றையும் கருத்தில்கொண்டு இலங்கை தொடர்பான இறுதி அறிக்கை விரைவில் தயாரிக்கப்பட்டு ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என பிலிப்பே கமாரிஸ் மேலும் தெரிவித்தார்.

ஏற்றுமதி வரிச்சலுகைக் காலத்தை மேலும் நீடிப்பதற்கான முக்கிய நிபந்தனையாகக் கருதப்படும் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராயும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: