அனைத்துக்கட்சிக் கூட்டத்தை அ.தி.மு.க., ம.தி.மு.க. புறக்கணிப்பு

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி ஒக்டோபர் 14இல் கூட்டவிருக்கும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிக்கப்போவதாக அ.இ.அ.தி.மு.க.வும், ம.தி.மு.க.வும் அறிவித்துள்ளது.

அனைத்துக்கட்சிக் கூட்டம் ஒரு கண்துடைப்பு முயற்சி என்று விமர்சித்திருக்கும் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா,

கருணாநிதிக்கு உண்மையில் ஈழத் தமிழர்கள் குறித்து அக்கறை இருந்தால் மத்திய கூட்டணி அரசாங்கத்திலிருந்து தி.மு.க. விலகவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதாக நேற்றையதினம் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்த ஜெயலலிதா, தற்போது அந்த விவகாரம் குறித்த கலைஞர் கருணாநிதியின் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா ஆயுத உதவி செய்வதைத் தடுத்து நிறுத்தாத கருணாநிதி ஈழத்தமிழர்கள் தொடர்பாக அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்துவதற்கு தகுதியற்றவர் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வை.கோபாலசாமி தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாகவே தமிழக அரசியலில் ஈழத் தமிழர் விவகாரம் பிரதான இடம் பிடித்துள்ளபோதும், ஒவ்வொரு கட்சிகளும் தமது ஆதரவை ஒவ்வொரு கோணத்திலிருந்தே வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: