உலகத் தமிழர்களின் நன்றி: தமிழக முதல்வர் மகிழ்ச்சி- ஒரணியில் திரள அழைப்பு


நோர்வே தமிழ்ச் சங்கம், வட அமெரிக்க தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட உலகத் தமிழர்களின் ஆதரவுக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சென்னையில் இன்று வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

ஓரணியில் திரளக் கூடாதோ?

சரித்திரம் படைத்த தமிழர்
சாகிறார் என்ற செய்தி
செவியினில் எட்டியவுடன்
கதவு திறந்தது - மத்தியப் பேரரசு - நம்
கதறல் கேட்டு; கண்ணீர் துடைக்க
கரமும் நீட்டியது.

நாடு கடந்து வாழ்கின்ற
நார்வே தமிழ்ச் சங்க நண்பர்களும்;
நம்பிக்கை துளிர்த்திடக் கடிதம் எழுதி
நன்றி தெரிவிக்கின்றார்! லண்டன்
நாடாளுமன்றத் தமிழ் உறுப்பினர் குழுவின்
நற்றமிழர் சார்பில் நமது முயற்சியைப் பாராட்டி
வீரேந்திர சர்மா வெளியிடுகிறார், விடியல் தோன்றுமென்று!
வெந்த புண்ணுக்கு மருந்தாக வன்றோ
வெளிநாட்டில் வாழ்கின்ற இன உறவுத்
தமிழர்களின் இதயம் துடிக்கிறது!
அமெரிக்க மருத்துவர் பஞ்சாட்சரம் என்பார்
அடைந்திடும் மகிழ்ச்சிக்கு அளவு தான் ஏது?

இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் சேனாதிராஜா, எம்.பி.,
இதயம் மலர இனிய வாழ்த்துக் கூறி இன்புறுகின்றார் -
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பிரதிநிதிகள் -
வாழ்த்துக்களை வாரியன்றோ இறைக்கின்றார்
வற்றாத அன்பைப் பொழிந்து இலங்கையில்
பொற்றாமரை போல் அமைதி பூத்திட தவமிருக்கின்றார் -
உலகத் தமிழ்ச் சாதி ஒன்று திரண்டு ஓர் உளம் கொண்டு
உதயமாகட்டும் ஈழத்தில் அமைதியென்று இறைஞ்சி நிற்கும்போது;
இங்குள்ள தமிழரிடை ஆயிரம் அரசியல் வேறுபாடு உண்டெனினும்
மூட்டை கட்டி அவற்றையெல்லாம் வைத்து விட்டு -
ஒன்றுபட்டு இலங்கைத் தமிழர் கேட்டை நீக்கிட
ஓரணியில் தான் திரளக் கூடாதோ?

இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது.

No comments: