சிறிலங்கா விமானப்படையின் நவீன குண்டுவீச்சு விமானங்களை இயக்கும் இந்திய விமானிகள்

அண்மையில் உக்ரேன் நாட்டிலிருந்து கொள்வனவு செய்த சிறிலங்கா விமானப்படையின் நவீன குண்டு வீச்சு விமானங்களை இந்திய விமானப் படையினரின் விமானிகளே ஓட்டி வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைக்காலங்களாக சிறிலங்கா விமானப்படையானது தமிழப் பகுதிகள் மீதான விமானத் தாக்குதல்களுக்கு, நவீன குண்டுவீச்சு விமானங்களைப் பயன்படுத்தி வருகிறது.

இத்தாக்குதல்களில் தினந்தோறும் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டு வருவதும், அவர்களின் வாழ்வாதாரங்கள் அனைத்துமே இல்லாதொழிக்கப்பட்டு வரும் நிலையில், சிறிலங்கா விமானப்படையினரின் குண்டு வீச்சு விமானங்களை இந்திய விமானப்படையினரின் விமானிகளே ஓட்டி வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரேன் நாட்டிலிருந்து சிறிலங்காவானது அண்மையில் கொள்வனவு செய்த ‘MIG27, MIG29′ போன்ற நவீன தொழில்நுட்ப குண்டுவீச்சு விமானங்களை செலுத்தக்கூடிய விமானிகள் சிறிலங்காவிடம் இல்லை என்பதும், குறுகிய காலத்தில் அவற்றை செலுத்துவதற்கு ஏற்ற பயிற்சிகள் பெறுவதென்பது சாத்தியப்படாத ஒன்றாகும்.

இந்நிலையில் சிறிலங்கா விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ள இக்குண்டுவீச்சு விமானங்களைச் செலுத்துவதற்கு விமானிகள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களையும் இந்திய அரசு சிறிலங்காவிற்கு வழங்கியுள்ளது. இந்திய விமானப்படையில் ரஷ்ய தயாரிப்புகளான ‘MIG27, MIG29′ குண்டுவீச்சு விமானங்களே அதிக அளவில் பயன்பாட்டிலுள்ளது.

அண்மைக்காலங்களாக சிறிலங்கா அரசால் கொள்வனவு செய்யப்படும் ஆயுத தளபாடங்கள் அனைத்தும் இந்திய படைத்துறை வல்லுனர்களின் ஆலோசனைகளின் பேரில்தான் கொள்வனவு செய்யய்யடுகிறது.

அண்மையில் வவுனியாவில் தாக்கப்பட்ட சிறிலங்கா படைகளின் வன்னி கூட்டுப்படைத்தள தலைமயகத்தில் சில இந்தியப் படையினர் காயமடைந்து கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் இந்தியப் படைகள் தமிழர் தாயகத்தில் நிலை கொண்டிருப்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்தமை தெரிந்ததே.

No comments: