புலம்பெயர்ந்த ஒவ்வொரு தமிழரினதும் இதயங்களிலும் "தமிழ் ஈழம்'


தமிழ் ஈழம் ஏற்கனவே இருக்கின்றதென நான் நினைக்கிறேன். இது புலம்பெயர்ந்த ஒவ்வொரு தமிழரினதும் இதயங்களிலும் மனதிலும் உள்ளது. இதுவே யதார்த்தம் என்று புகழ்பெற்ற இந்தியப் பத்திரிகையாளர் அனிதா பிரதாப் கூறியுள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களாக தெற்காசிய மோதல்கள் யாவற்றையும் பற்றி எழுதியிருக்கும் அனிதா பிரதாப், கடந்த 14 ஆம் திகதி நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய இலங்கையில் தமிழர்கள் விரிவான வரலாறு (கி.மு.300 கி.பி.2000) (Tamils in Srilanka- A comprehensive History cc 300 b.c- 2000 A.D) என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

கலாநிதி குணசிங்கத்தின் உன்னதமான பணியைப் பாராட்டிய அனிதா பிரதாப், இலங்கைத் தமிழரின் வரலாற்று முக்கியத்துவத்தையும் அழுத்தியுரைத்திருக்கிறார்.

"தமிழரின் அடையாளத்துவம் வலிமையானது. தமிழ் தேசம் பலமானது. எவராலும் உங்களிடமிருந்து அதனை அகற்றிவிட முடியாது' என்று அனிதா பிரதாப் கூறியுள்ளார்.

அவர் தமதுரையில் மேலும் தெரிவித்திருப்பதாவது; ஆனால், இந்த அடையாளத்துவத்துக்கு உங்களால் எதனை திருப்பிக் கொடுக்க முடியுமென்பதே கேள்வியாகும். ஒவ்வொருவருமே விடுதலைப்புலியாக இருந்து தனது வாழ்வை தியாகம் செய்ய முடியாது. பல நாடுகளில் அந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் உங்களால் அதனை செய்யமுடியாது. அது அவசியமும் அல்ல. ஆனால், நோர்வேயின் பிரஜை அல்லது வேறொரு நாட்டின் பிரஜையாக இருக்கும் நீங்கள் தமிழ் அடையாளத்துவத்தை கொடுக்க முடியும். இது உங்கள் திறமையாகும். நீங்கள் எதனைச் செய்தாலும் எந்தத் துறையிலிருந்தாலும் எந்தக் கிளையில் இருந்தாலும் அந்தத்துறையில் சிறப்பாக இருத்தல் வேண்டும். அதுவே தொழில்சார் நிபுணத்துவமாகும். அதுவே புலமையை கொண்டுவரும். அது இந்த வடிவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது தங்களின் உன்னதமான பங்களிப்பாகும். உதாரணமாக யூதர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தத்தமது வித்தியாசமான துறைகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களாக திகழ்ந்தனர்.

கலை, விஞ்ஞானம், இசை, மருத்துவம் ஆகிய எந்தத்துறையிலும் அவர்களில் ஒருவர் முன்னணியான இடத்திலிருந்து புகழ்பெற்றுள்ளார்.

1983 இலிருந்து இலங்கையிலுள்ள தமிழருக்கு "துன்பியல்' ஆரம்பமாகிவிட்டது. பெருந்தொகையான தமிழர் இலங்கையை விட்டு வெளியேறினார்கள். ஏனெனில், இலங்கையில் தமிழராக இருப்பது பாதுகாப்பற்றதாகும். அவர்கள் தமது நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. இன்று கடைசித் தலைமுறை, எனது தலைமுறை காணாமற்போன தலைமுறையாகிவிட்டது. 20 வயதில் பெரும்பான்மையானோர் இலங்கையை விட்டு வெளியேறிவிட்டனர். இப்போது அவர்கள் 50, 60 வயதுடையவர்களாக இருக்கின்றனர். இது உயிர் வாழ்வுக்கான விடயமாகும். தமது உயிரை, குடும்பத்தைப் பாதுகாக்க ஓடிக்கொண்டிருந்தனர்.

ஆனால், இன்று அவர்களின் பிள்ளைகள் வளர்ந்துவிட்டனர். அவர்கள் திறந்த, ஜனநாயக கோட்பாடுகளை கடைப்பிடிக்கும் நாடுகளில் வாழ்கின்றனர். நோர்வே, பிரிட்டன், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, ஐரோப்பாவின் ஏனைய நாடுகள் பலவற்றில் வாழ்கின்றனர்.

தமது பெற்றோர்கள், பாட்டன், பாட்டிகள் வாழ்ந்த வாழ்விலும் பார்க்க இப்பிள்ளைகள் அதிகளவு பாதுகாப்பான வாழ்வை முன்னெடுக்கின்றனர். நல்ல பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்கின்றனர். அவர்களால் உன்னதமான விடயங்களை கொண்டுவர முடியும். தாங்கள் எத்தகைய ஆற்றல் உடையவர்களாக இருக்கின்றனர் என்பதை வெளிப்படுத்த இந்தத் தலைமுறையினருக்கு வேளை வந்துள்ளது. தமிழர்கள் எத்தகைய ஆற்றல் உடையவர்கள் என்பதை வரலாறு காட்டி நிற்கிறது என்றும் இதுவே யதார்த்தம் என்றும் அனிதா பிரதாப் கூறியுள்ளார்.

No comments: