கொழும்பு துறைமுகத்தில் ஒத்திகை நடவடிக்கை


கொழும்பு துறைமுகத்தின் பாதுகாப்பையொட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கடற்படையினர் மேற்கொண்ட பாரிய ஒத்திகையால் பெரும் பதற்றமேற்பட்டது. நேற்றுக் காலை 8 மணியளவில் ஆரம்பமான இந்த ஒத்திகையில் பெருமளவு கடற்படையினரும் கடற்படைக் கமாண்டோ படையினரும் ஈடுபட்டனர்.

துறைமுகத்தின் வெளிப்புறத்திலும் கடற்படையினர் நிறுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஒத்திகையின்போது துறைமுகத்தினுள் பலத்த துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் தொடர்ச்சியாகக் கேட்டன. இதனால் துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் மக்கள் மத்தியில் பெரும் பதற்றமேற்பட்டது.

இவ்வேளையில் அடுத்தடுத்து நான்கு குண்டு வெடிப்புச் சத்தங்களும் கேட்கவே மக்கள் மேலும் அச்சமடைந்தனர். பலர் வீடுகளுக்கு வெளியே வந்து வேறிடங்களுக்குச் செல்லவும் முற்பட்டனர். இவ்வேளையில் துறைமுகத்தை அண்டிய கடற்பரப்பில் பீரங்கிப் படகுகளும் தாக்குதல் நடத்தின.

எனினும் துறைமுகப் பாதுகாப்பை முன்னிட்டு கடற்படையினர் மேற்கொண்ட ஒத்திகையே இதுவெனத் தெரிய வந்ததும் மக்கள் சற்று நிம்மதியடைந்தனர்.

நிலைமை இவ்வாறிருக்கையில், வானில் உயரப் பறந்து வந்த ஹெலிகொப்டர்களிலிருந்து பரசூட்களில் பல படையினர் துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் குதிக்கவே துறைமுகத்திற்குள் ஏதோ நடந்து விட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டது.

அதேவேளை இன்று திங்கட்கிழமையும் காலை 9.30 மணியளவில் ஹெலிகொப்டர்களிலிருந்து பரசூட்களில் படையினர் அப்பகுதிகளிலும் சுகததாச ஸ்ரேடியத்திலும் குதித்துப் பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

No comments: