விடுதலைப் புலிகள் ஒரு தொகுதி ஆயுத தளபாடங்களைத் தருவித்துள்ளார்கள் - சண்டேரைம்ஸ்

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு தொகுதி ஆயுதங்களைத் தருவித்துள்ளனர் என்று இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:

வவுனியா படைத் தலைமையகம் மீது 09.09.08 விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்கு அரசு விசாரணைக் குழுவை நியமித்துள்ளது.

வவுனியா வான்படைத் தளத்தின் வான்படை கட்டளை அதிகாரி குறூப் கப்டன் றொமேஷ் பெர்னாண்டோ இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இத்தாக்குதலின் போது படைத்தளத்தில் காணப்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான ஆய்வுகளை இக்குழு மேற்கொள்ளவுள்ளது.

மேலும் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் இந்திரா இரு பரிமாண கதுவீ (ராடர்) சேதமடைந்ததுடன் அதனை ஒத்த மேலும் பல முக்கிய இலக்குகளும் குறிவைக்கப்பட்டிருந்தன.

எனினும் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு அதனை வெளியிட முடியவில்லை.
இதனிடையே விடுதலைப் புலிகள் ஒரு தொகுதி ஆயுத தளபாடங்களைத் தருவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

நான்காவது ஈழப்போர் ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. விடுதலைப் புலிகள் தீவிர எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். அவர்களின் வலிமையைக் குறைத்து மதிப்பிட முடியாது.

விடுதலைப் புலிகளின் 80 விகிதமான பலத்தை முறியடித்து விட்டதாகப் படைத்தரப்பு தெரிவித்து வருகின்ற போதும் அண்மைய வாரங்களில் விடுதலைப் புலிகளின் எதிர்த்தாக்குதல்கள் தீவிரம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: