ஓமந்தை பாதை எந்நேரமும் பூட்டப்பட்டு வன்னிக்கான உணவு வருவதும் தடைப்படலாம்


ஓமந்தையூடான வன்னிக்கான போக்குவரத்து, எந்த வேளையிலும் நிறுத்தப்படலாம். அதன் விளைவாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருள்களையும் மற்றும் அத்தியாவசியப் பொருள்களையும் எடுத்துச் செல்லும் சேவை எந்த நேரத்திலும் தடைப்படும் அபாயம் உருவாகிவருகிறது.
ஏ9 வீதியில் கிளிநொச்சிக்கு அடுத்த பெரிய நகரமாக விளங்கும் மாங்குளத்தைக் கைப்பற்றும் இலக்குடன் படையினர் தமது தாக்குதல் நடவடிக்கைகளை திசைதிருப்பி முடுக்கியுள்ளனர். இராணுவத்தின் 57 ஆவது படையணி இப்போது மாங்குளத்தை இலக்குவைத்தே தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
இராணுவத்தினர் மற்றும் ஒரு களத்தை புதிய முறிகண்டிப் பகுதியில் திறந்து தாக்குதல்களை நடத்துகின்றனர். சுமார் 4 கிலோமீற்றர் தொலைவிலேயே அவர்கள் இப்போது நிலை கொண்டிப்பதாகவும் இன்னும் ஒரு சில தினங்களில் அந்த வழியால்ஏ9 பாதையை அடைந்துவிடுவர் என்றும் பாதுகாப்பு ஆய்வுத் தரப்புகள் நேற்று ஊகம் தெரிவித்தன.
எதிர்வுகூறப்படுவது போன்று இராணுவத்தினர் ஏ9 வீதியை அடையும் பட்சத்தில், அதன் ஊடான போக்குவரத்துக்கள் யாவும் ஸ்தம்பித்துவிடும் எனப் பாதுகாப்புத்துறையுடன் நெருங்கிய தொடர்புடைய வட்டாரங்கள்மேலும் தெரிவித்தன.
ஓமந்தைப் பாதை போக்குவரத்துக்கு மூடப்படும் பட்சத்தில் வன்னிக்கு உணவுப் பொருள்களை எடுத்துச் செல்லும் வாகன அணிகள் செல்ல முடியாத நிலை தோன்றும் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இத்தகைய ஒரு நிலை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டால் வன்னிக்கு பொருள்களையும் மற்றும் அத்தியாவசியப் பொருள்களையும் எடுத்துச் செல்லும் பணிகள் தடைப்பட்டால் வன்னியில் உணவுப் பொருள்களுக்கு பெரும் தட்டுப்பாடும் பற்றாக்குறையும் ஏற்படும் எனச் சுட்டிக் காட்டப்படுகின்றது.

No comments: