வத்திக்கான் பிரதிநிதியின் கருத்துக்களை தவறாகப் பிரசுரித்தமைக்கு அரசு மன்னிப்புக் கோர வேண்டும் - ஜயலத் ஜயவர்த்தன

வத்திக்கானின் பிரதிநிதியாக இலங்கை வந்திருந்த கர்தினால் பிரான்ஸிஸ் அரின்சே தெரிவித்த கருத்துக் குறித்து அரச ஊடகம் தவறான தகவலை உண்மைக்குப் புறம்பான தகவலை வெளியிட்டுள்ளது. எனவே தவறான செய்தியை வெளியிட்டமைக்கு வத்திக்கான் அரசிடம் மன்னிப்புக் கோரவேண்டும்.
இவ்வாறு பேராசிரியர் ஜயலத் ஜய வர்த்தன கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாப்பரசரின் மக்கள் யாத்திரை அமையத்தின் தலைவர் அதி.வண. கர்தினால் பிரான்ஸிஸ் அரின்சே இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை கடந்த 16ஆம் திகதி மேற்கொண்டிருந்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கர்தினால் சந்தித்து உரையாடியபோது மடுமாதா தேவாலயம் தொடர்பான அவர் தெரிவித்த கருத்துகள் அரச இணையத்தளத்தில் செப்ரெம்பர் மாதம் 17ஆம் திகதி கீழ்வருமாறு பிரசுரிக்கப்பட்டிருந்தது.
வரலாற்றுச் சிறப்புமிக்க மடுமாதா தேவஸ்தானத்தை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்த செயற்பாடு தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமைதாங்கும் அரசிற்கு அனைத்து கத்தோலிக்க மக்களதும் நன்றி உரித்தாக வேண்டும் என வத்திக்கான் கர்தினால் பிரான்ஸிஸ் அரின்சே செப்ரெம்பர் 16ஆம் திகதி ஜனாதிபதியைச் சந்தித்த சந்தர்ப்பத்தில் கூறியிருந்தார்.
ஆயினும் செப்ரெம்பர் 20ஆம் திகதி இலங்கை வத்திக்கான் தூதுவராலயத்தின் உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
கௌரவ ஜனாதிபதியுடனான நட்புறவுடனான சந்திப்பின்போது மடுமாதா தேவஸ்தானம் தொடர்பாகவோ, வேறு எந்தவித அரசியல் தொடர்பான கருத்துக்களோ அதி.வண.கர்தினால் அவர்களால் வெளியிடப்படவில்லை.
இதற்கிணங்க அரச ஊடகத்தின் வாயிலாக இவ்வாறு உரோம் வத்திக்கானின் பிரதிநிதியாக இலங்கைக்கு வருகை தந்த கௌரவத்திற்குரிய சமயத் தலைவர் பெரும் தர்மசங்கடத்திற்குள் உட்படுத்தப்பட்டுள்ளார். உண்மையில் இது பெரும் கவலைக்குரிய விடய மாகும்.
தற்போதாவது அரச ஊடகம் உண்மையை எடுத்துக்கூறி தம்மால் வெளியிடப்பட்ட செய்தியை சரிப்படுத்தல் அவசியம். அவ்வாறே தவறான செய்தியை வெளியிட்டதற்காக வத்திக்கான் அரசிடம் மன்னிப்புக் கோருதலும் அவசியம் என்றுள்ளது.

No comments: