சரத் பொன்சேகாவின் கூற்றுக்கு மாற்றுக் கொள்கைக்கான நிறுவனம் கண்டனம்


இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்ததாகக் கூறப்படும் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்தை மாற்றுக் கொள்கைக்கான நிறுவனம் கண்டித்துள்ளது.

கனடாவின் நெசனல் போஸ்ட் செய்தித்தாளின் ஸ்டுவர்ட் பெல்லுடனான செவ்வியின் போது சரத் பொன்சேகா தமது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். இலங்கை நாடு சிங்களவர்களுக்கு சொந்தமானது. சிங்களவர்கள், இந்தநாட்டில் 75 வீதம் என்ற அளவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தேவையற்ற விடயங்கள் தொடர்பில் கோரிக்கை விடுக்கமுடியாது என சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் இவ்வாறான கருத்துக்களை சரத் பொன்சேகா பல்வேறு பொது இடங்களிலும் தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டுள்ள மாற்றுக் கொள்கைக்கான நிறுவனம் நாட்டின் இராணுவத் தளபதி என்ற வகையில் அவர் இவ்வாறான தனிப்பட்ட கருத்தை வெளியிட்டிருக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளது. இது இலங்கையின் ஜனநாயக வலுவையும், இலங்கையின் அரசியலமைப்பையும் மீறும் செயல் என்றும் மாற்றுக் கொள்கைக்கான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பின் கீழ் பணியாற்றுவதையே இராணுவம் கடமையாகக் கொண்டுள்ளது. இதனைத் தவிர தனிப்பட்ட ரீதியில் செயற்படுவதற்கு அதற்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை. இந்தநிலையில் சரத் பொன்சேகாவின் கருத்து இலங்கையின் அரசியலமைப்பை மீறும் செயலாகும். 1961 ஆம் ஆண்டில் இலங்கை இராணுவம், முதல் தடவையாக அரசியலமைப்பை மீறும் செயலில் ஈடுபட்டது. அன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இராணுவம் கட்டுப்படுத்த முனைந்தது.

இதேவேளை இராணுவ வீரர் ஒருவர் தெரிவித்துள்ள இந்தக் கருத்தின் மூலம், பாகிஸ்தானின் நிலைமையை இலங்கையில் தோற்றுவிக்கும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என்றும் மாற்றுக்கொள்கைக்கான நிறுவனம் கோரியுள்ளது.

இவரின் கருத்து தற்போதைய அரசாங்கத்தின் கருத்திற்கு முற்றிலும் மாறுபட்டது என தெரிவித்துள்ள அந்த நிறுவனம், அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி உரையாற்றியபோது அனைத்துத் தமிழர்களும் புலிகள் அல்ல என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தமையை சுட்டிக் காட்டியுள்ளது.

இந்தநிலையில் இலங்கையில் உரிய நிர்வாக கட்டமைப்பைத் தோற்றுவிக்க அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் என மாற்றுக்கொள்கைக்கான நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

1 comment:

சித்திரகுப்தன் said...

உப்பிடியெண்டா எப்பிடி உவையோட சேர்ந்து வாழுறது சொல்லுங்க பாப்பம்.
என்ன இராணுவத்தளபதியும் அரசியல் கருத்தை வெளியிட தொடங்கிட்டாரோ? அது சரி எல்லாம் தலைகீழாக தான நடக்குது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இராணுவத்துக்கு கட்டளையிடுறார்... அவர் தன்ர வேலையை செய்யிறத விட்டுட்டு அவர் தான் பாதுகாப்பு அமைச்சர் மாதிரியெல்லோ நடக்கிறார் இது எப்படி இருக்கு..? இதனால சரத்துக்கும் பாயாவுக்கும் இடையில சின்ன சின்ன சண்டை அப்பப்ப வருமாம். கேள்விப்பட்டிருக்கிறியளே..?