வன்னிக்கு உணவு அனுப்ப ஏற்பாடு; விநியோகம் முடிவும்வரை ஐ.நா. அதிகாரிகள் அங்கு தங்கியிருப்பர் - நீல் பூனே


வன்னியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கு விநியோகிப்பதற்கான உணவு லொறிகள் ஓரிரு தினங்களில் அங்கு செல்லவிருப்பதாக ஐ.நா. இலங்கை வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே தெரிவித்தார்.

உணவு விநியோகம் முடியும் வரையில் ஐ.நா. அதிகாரிகள் அங்கு தங்கியிருப்பர் என்றும் அவர் மேலும் கூறினார்.

அரசாங்கத்தின் உத்தரவுக்கமைய, வன்னியிலிருந்து ஐ.நா. அமைப்புக்கள் உட்பட அனைத்து அரசசார்பற்ற நிறுவனங்களும் வெளியேறிய பின்னர் முதற்தடவையாக இந்த உணவு விநியோகம் இடம்பெறுவதாகத் தெரிவித்த அவர், ஐ.நா. கொடிகளுடன் உலக உணவுத் திட்டத்தின் வாகன அணி வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதிகளுக்குச் செல்லும் என்று கூறினார்.

மக்களுக்கு உரிய முறையில் உணவு நேரடியாக விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதே எமது பிரதான இலக்கு என்று தெரிவிக்கும் பூனே, முதலாவது முயற்சி வெற்றிபெற்றாலே அதே வழியில் தமது முயற்சிகளைத் தொடர முடியும் என்றும் கூறினார்.

உணவுப் பொருள்கள் அங்கு களஞ்சியப்படுத்தப்படமாட்டாது. அவை நேரடியாக மக்கள் இடம்பெயர்ந்து தங்கியிருக்கும் இடங்களுக்கே எடுத்துச்செல்லப்பட்டு விநியோகிக்கப்படும். என்று மேலும் தெரிவித்த அவர், ஐ.நா. அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழேயே உணவு விநியோகம் இடம்பெறும் எனவும், விநியோகம் முடியும் வரையில் அவர்கள் வன்னியில் தங்கியிருப்பார்கள் என்றும் கூறினார்.

ஏ-9 வீதியில் மோதல்கள் தீவிரமாக இடம்பெற்று வருவதால், மாற்றுப் பாதைகளினூடாக கிளிநொச்சி கிழக்குப் பகுதிக்கு உணவுப் பொருள்களை எடுத்துச்செல்லத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

No comments: