ராடார் வசதியுடன் நவீனமயப்படுத்தப்பட்டு நெடுந்தீவில் புதிய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது.


நெடுந்தீவு கடற்படை முகாம் மிக நீண்ட நாட்களின் பின் மிக நவீன வசதிகளுடன் மீளப் புனரமைக்கப்பட்டுள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னர் இருந்த இடத்திலேயே புதிய முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய புதிய ராடார்கள் மற்றும் நவீன உபகரணங்களுடன் நெடுந்தீவு கடற்படை முகாம் நவீன மயப்படுத்தப்பட்டு கடந்த திங்கட்கிழமை திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் வட பிராந்தியத்தை சேர்ந்த கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

எனினும் இந்தக் கடற்படை முகாமின் முன்னாள் பொறுப்பதிகாரி மாற்றப்பட்டு புதிதாக நியமிக்கப்பட்டவர் அன்றைய தினம் கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வருட முற்பகுதியில் நெடுந்தீவு கடற்படை முகாம் விடுதலைப் புலிகளினால் தாக்கி அழிக்கப்பட்டு அங்கிருந்த நவீன ராடார்களும் அவர்களால் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

புலிகளால் தாக்கி அழிக்கப்பட்ட பின்னர் இந்தக் கடற்படை முகாம் வேறு கடற்படை முகாம்களிலிருந்து வந்த கடற்படையினரின் உதவியுடன் இயங்கி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள முகாமில் பொருத்தப்பட்டுள்ள ராடாரானது புலிகளின் பகுதிக்கும் இந்தியாவுக்குமிடையிலான படகுகள் மற்றும் கப்பல் போக்குவரத்துக்களைக் கண்டுபிடிக்கக் கூடியவையெனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நன்றி தினக்குரல்

No comments: