இலங்கை வான்படையின் குண்டுத் தாக்குதலில் கிளிநொச்சி உயர்தொழில்நுட்ப நிறுவனம் அழிப்பு


கிளிநொச்சியில் இயங்கி வந்துள்ள உயர்தொழில்நுட்ப நிறுவனமான கணிநுட்பக்கூட்டு நிறுவனம் மீது இலங்கை வான்படை நேற்று புதன்கிழமை பிற்பகல் 2:30 நிமிடமளவில் குண்டுவீசி அழித்துள்ளது.

கல்வி மேம்பாட்டுக்காக செயற்பட்டு வந்த கணிநுட்பக்கூட்டு நிறுவனம், கணனி கற்பித்தல் மற்றும் ஆசிரியர்களை உருவாக்குதல், கணனி கற்கையை ஊக்குவித்தல் போன்ற கல்விப்பணிகளை செய்து வருகின்றது. அத்துடன் மாணவர்களின் கணனி கல்வி வளர்ச்சிக்காக புலமைப்பரிசில் திட்டங்களையும் அது செயற்படுத்தி வருகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட உயர்கல்வி நிறுவனமான கணிநுட்பக்கூட்டு நிறுவனத்தின் பணிமனைத் தொகுதி இலங்கை வான்படையினால் நேற்று பிற்பகல் குண்டுவீசி அழிக்கப்பட்டது.

திட்டமிட்டு தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடுப்பதற்காக இந்த கல்வி நிறுவனத்தின் மீதான அழிப்புத் தாக்குதலை இலங்கை அரசு நடத்தியுள்ளது என்று கல்வியிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசின் திட்டமிட்ட கல்வி அழிப்புத் தாக்குதலாக இது அமைந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள தமிழ்க் கணனி நிபுணர்களின் துணையுடன் கணிநுட்பக்கூட்டு நிறுவனம் தனது பணியை கல்விச் சமூகத்துக்கு ஆற்றி வந்துள்ளது.

நேற்று ரம்ழான் நாளானதால் நிறுவனத்தின் பணியாளர்கள் பணிக்கு வராததால் உயிர் இழப்புக்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

No comments: