அரசியல்துறை, சமாதான செயலகங்களின் மீது வான்படையினர் தாக்குதல்: விடுதலைப் புலிகள்


கிளிநொச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்திருந்த புலிகளின் அரசியல்துறை மற்றும் சமாதான செயலகங்களின்மீது இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலி்ல் அந்தச் செயலகங்கள அழிந்துள்ளதாகவும் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்- 16 பேர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு விமானங்கள் தாழப்பறந்து இந்தப் பிரதேசத்தில் 16 குண்டுகளை வீசியுள்ளன. வீசிய 16 குண்டுகளும் வெடித்துள்ளன.

இதில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை செயலகம், சமாதான செயலகம் மற்றும் சர்வதேச செஞ்சி்லுவைச் சங்கம் உட்பட சர்வதேச தொண்டு நிறுவனங்கள், விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொள்ளும் அலுவலகம் போன்ற முக்கிய அலுவலகக் கட்டிடங்கள் அழிந்துள்ளன.

அத்துடன் இந்தப் பிரதேசத்தில் உள்ள 16 வீடுகளும் சேதமடைந்திருப்பதாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களைப் பன்னாட்டு இராஜதந்திரிகளும்- முக்கியஸ்தர்களும்- குறிப்பாக நோர்வே நாட்டின் முக்கிய தலைவர்கள் இராஜதந்திரிகள் ஆகியோர் இந்தச் சமாதான செயலகத்திலும் அரசியல்துறை செயலகத்திலுமே சந்தித்துப் பேச்சுக்கள் நடத்துவது வழக்கம்.

ஐநாவின் முக்கிய அதிகாரிகளும் அண்மையில் இந்தச் செயலகங்களிலேயே விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள 2 பொதுமக்களில் எவருமே அடையாளம் காணப்படவில்லை என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 16 பேரும் கிளிநொச்சியின் பழைய வைத்தியசாலையில் இயங்கி வருகின்ற மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் - இறந்தவர்களின் உடல்களும் அங்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் விபரம்

தங்கவேல் ரகு (வயது 30)

சுப்பையா சிவலிங்கம் (வயது 48)

இராசலிங்கம் சந்திரா (வயது 40)

ஐயாத்துரை மகாலிங்கம் (வயது 55)

சங்கரப்பிள்ளை ஆனந்தசிவம் (வயது 60)

சின்னக்குட்டி வேலும்மயிலும் (வயது 70)

சந்திரராசா வினோத் (வயது 15)

சிவகுருராசா டெனிஸ் (வயது 22)

மகேந்திரராசா சந்திரகுமாரி (வயது 14)

கருணாநந்தநேசராசா சந்திரசேனன் (வயது 24)

செல்வநாயகம் கந்தசாமி (வயது 64)

தேவகுருசேனன் குருகுலதேவன் (வயது 34)

சிவசற்குணராசா சங்கரன் (வயது 27)

விமலநாதன் சிவகாந்திமதி (வயது 18)

தேவராசா கருணாகரன் (வயது 21)

கோகுலராசா சண்முகதர்சினி (வயது 18)

ஆகியோர் இதில் காயமடைந்தனர்.

கொல்லப்பட்ட இருவரும் வீதியில் சென்று கொண்டிருந்தவர்கள் ஆவர். இவர்களின் பெயர் விபரம் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை.

No comments: