போர் அல்ல அரசியல் தீர்வே நாட்டை மீட்கும்; யதார்த்த நிலை விரைவாக உணரப்பட வேண்டும்


ஐ.நா.வின் 63 ஆவது வருடாந்த கூட்டத் தொடரில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சென்ற வாரம் உரையாற்றுகையில் தான் ஒரு சிங்கள இனத்தவர் என்பதை முதன்மைப்படுத்தியே "எனது தாய் மொழி சிங்களம்' என்று குறிப்பிட்டிருந்தார். ஆனாலும், சில எண்ணங்களைச் சகோதரத் தமிழ் மொழியில் பேசவிரும்புகிறேன் எனக் குறிப்பிட்டு ஒரு சில வார்த்தைகளைத் தமிழ் மொழியில் கூறி வைத்தார்.

அது மிகவும் பாராட்டுக்குரியதென குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தாவி இன்றைய அரசாங்கத்தில் முக்கியமான பதவிகளை வகிப்பவர்களாகிய வெளிநாட்டமைச்சர் ரோகித போகொல்லாகம, இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, ஜனாதிபதி ஆலோசகர் ஏ.எச்.எம்.அஸ்வர் ஆகியோர் வானளாவப் புகழ்ந்துள்ளனர். அது ஜனாதிபதியின் பற்றுறுதியைக் காட்டுவதாகவும் அரச மற்றும் அரசாங்கத் தலைவரால் தமிழ் மொழி மதிக்கப்பட்டதும் பாவிக்கப்பட்டதும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு ஒரு பலமான சமிக்ஞையைக் கொடுத்துள்ளதெனவும் அவர்கள் புளாகாங்கிதம் அடைந்துள்ளனர்!

உண்மையை மூடி மறைக்கும் யுக்திகள்

தமிழ் பேசும் மக்களை பொறுத்தவரை ஜனாதிபதி ராஜபக்ஷ தமிழ் மொழியிலும் உரையாற்றியதானது, சர்வதேச சமூகத்திற்கு ஏமாற்று வித்தை கற்பிக்கும் தந்திரோபாயமேயொழிய வேறல்ல எனலாம். இரு மொழிகளும் அரச கரும மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டு எமது நாட்டில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது உண்மையை மூடி மறைக்கும் செயலாகும்.

ஏனென்றால், 1956 இல் தனிச்சிங்களச் சட்டத்தினை இயற்றி தமிழ் மக்கள் பெரிதும் அந்நியப்படுத்தப்பட்டு 32 வருடங்களின் பின் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இயற்றப்பட்டதாகிய 13 ஆவது திருத்தத்தின் கீழ் தமிழ் மொழிக்கு அரச கரும மொழி அந்தஸ்து வழங்கப்பட்டிருந்த போதும், அது இன்று வரை பெரும்பாலும் ஏட்டுச் சுரைக்காயாகவே இருந்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் ஒற்றையாட்சி முறையில் மாற்றமெதுவும் கிடையாதென இறுக்கமான நிலைப்பாட்டினையே அரசாங்கம் கொண்டிருக்கும் நிலையில் ஜனாதிபதி ஐ.நா. சபையிலோ வேறு எந்த அரங்கிலோ தமிழ் மொழியிலும் உரையாற்றுவதில் முக்கியத்துவம் எதுவுமே இல்லை. தமிழ்த் தலைவர்கள் தனது அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும் உள்ளனர் என்பதை ஒரு பேறாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். கடந்த 60 வருட காலத்தில் எல்லா அரசாங்கங்களிலும் தமிழ் தலைவர்கள் அமைச்சர்களாக இருந்து வந்துள்ளனர் என்பதை அவர் நிச்சயமாக மறந்திருக்க முடியாது.

அடுத்து, 1904 செப்டெம்பரில் சேர் பொன்னம்பலம் இராமநாதன் சிங்கள மக்கள் போல் நட்புணர்வும் உயர் குணவியல்புகளும் கொண்டுள்ள வேறு ஒரு இனத்தவர்களையும் தான் கண்ணுற்றதில்லை எனக் கூறியதாக ஜனாதிபதி தனது ஐ.நா. உரையில் மேற்கோள் காட்டியதோடு, அந்த வகையில் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமிடையே நிலவிய ஒற்றுமைக்கு அது ஒரு தெளிவான எடுத்துக் காட்டாயிருந்தது எனினும், இன்று ஒரு நாசகாரக் குழுவினர் அவை யாவற்றையும் தலை கீழாக மாற்றியுள்ளனர் என வருத்தம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 20 ஆம் நூற்றாண்டு வரலாற்றில் எத்தனையோ பக்கங்களை அவர் தட்டிப் பார்க்கத் தவறி விட்டார் என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. அதாவது குறிப்பாக 1910 களில் சிங்கள மக்கள் சார்பில் குரல் கொடுப்பதற்காக அன்றைய இக்கட்டான பயண நிலைமைகளையும் பொருட்படுத்தாது இராமநாதன் இங்கிலாந்து சென்று பிரித்தானிய ஆட்சியாளருடன் முகங்கொடுத்து கடுமையாக வாதாடியவர்.

அவர் அந்தப் பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும், சிங்களத் தலைவர்களால் வானளாவ பாராட்டப்பட்டவர். ஆனால், 1920 களின் பின்பு அதே இராமநாதன் அதே சிங்களத் தலைவர்களால் ஓரங்கட்டப்பட்ட நிலையில் இராமநாதன் தனது இறுதி வாழ்நாட்களில் பெரிதும் விரக்திக்கு உள்ளாகியிருந்தவர்.

1930 கள் முதல் 1970 கள் வரை சிங்கள முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தினரால் தமிழ் மக்கள் பல்வேறு புறக்கணிப்புகள் பாரபட்சங்கள், அடக்கு முறைகள், தமிழர் விரோத வன்முறைத் தாக்குதல்கள், இனக்கலவரங்கள் மற்றும் உயிர் உடைமை அழிப்புகளுக்கு தொடர்ச்சியாக ஆளாக்கப்பட்டு வந்த நிலையிலேயே ஜனாதிபதி குறிப்பிட்டிருந்த "நாசகாரக் குழுவினர்' தோற்றம் பெற்றனர் என்பதெல்லாம் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களால் வெகு வசதியாக மறக்கப்பட்டு விடுகின்றன என்பது மிகுந்த கவலைக்கு உரியதாகும்.

மங்கள சமரவீர சாடுகிறார்

2005 ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷவின் வெற்றிக்காக மிகக் கடுமையாக உழைத்தவரும் முதலில் வெளிநாட்டமைச்சர் பதவி வகித்தவருமாகிய பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, ராஜபக்ஷ அரசாங்கத்தின் போக்குகள் கண்டு சலித்துப் போன நிலையில், பல்வேறு பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அரசாங்கத்திலிருந்தும் வெளியேறிவிட்டார். அவர் அண்மையில் ஆங்கில ஏடுகளுக்கு வழங்கியிருந்த செவ்விகளில் குறிப்பிட்டிருந்த சில விடயங்கள் வருமாறு:-

ஹிட்லர் யூதர்களைப் பகிரங்க எதிரிகளாக்கியது போலவே இந்த அரசாங்கம் தமிழ் மக்களைப் பகிரங்க எதிரிகளாக்கியுள்ளது. யுத்த மனோபாவத்தினை மேலோங்கச் செய்துள்ளது. இந்த அரசாங்கம் தனது தவறுகளை ஒதுக்கி வைத்துள்ளது. நாட்டின் பொருளாதாரத் துறை குட்டிச் சுவராக்கப்பட்டுள்ளது. ஊழல் உச்ச கட்டத்தில் உள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கு எல்லா சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு காணப்பட வேண்டும். அரசாங்க தரப்பினரின் உயர் மட்டத்தில் அரசியல் உறுதியோ வலிமையோ, அற்ற நிலையில் ஏன் எத்தனையோ சர்வகட்சி மாநாடுகள் நடத்தப்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

மேற்கண்டவாறு அவர் கூறியதோடு, சர்வகட்சி பிரதிநிதிகள் குழு ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை மீது சந்தேகங் கொண்டுள்ளீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில், மிக நிச்சயமாக நான் சந்தேகங் கொண்டுள்ளேன். நான் அதில் பங்குபற்றி வந்தவன் என்ற வகையில் அக்குழு ஏன் அமைக்கப்பட்டது என்பதை நான் கூறுகின்றேன். சர்வதேச சமூகத்தினை ஏமாற்றுவதற்கான கைங்கரியமாகவே அது நிறுவப்பட்டது.உண்மையில் அதனை வைத்து சர்வதேச சமூகத்தைத் தவறாக வழிநடத்துமாறுதான் எனக்குப் பணிப்புரை செய்யப்பட்டது எனக் கூறினார்.

இந்த சர்வ கட்சிக் குழு பூச்சாண்டியானது. உதாரணமாக, மாநாட்டின் போது அல்லது இலங்கைத் தூதுக்குழுவொன்று அமெரிக்காவுக்கான விஜயம் மேற்கொள்ளும் போது தோன்றி மறைந்து விடுமென சமரவீர மேலும் கூறி வைத்தார்.

இராணுவத் தளபதியின் செவ்வி

இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா அண்மையில் கனடா, "நஷனல் போஸ்ட்' ஏட்டுக்கு வழங்கியிருந்த செவ்வியானது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இலங்கை சிங்கள மக்களுக்குச் சொந்தமானது என தான் கடுமையாக நம்புவதாகவும் சிறுபான்மை இனத்தவர்கள் தேவையற்ற கோரிக்கைகளை முன்வைக்காமல் இங்கு வாழலாம் என்பதாகவும் அவர் அந்தச் செவ்வியில் குறிப்பிட்டிருந்தது இன்று யாரும் அறிந்த விடயமாகும்.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினரால் விசனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, தளபதி சரத் பொன்சேகாவின் கூற்றானது குறிப்பாக சிறுபான்மை இன மக்கள் மத்தியில் பதற்ற உணர்வை ஏற்படுத்துவதுடன், இனங்கள் மத்தியில் மேலும் வேற்றுமைகளை உருவாக்கக் கூடியது என்றெல்லாம் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஐ.தே.க. உயர் பீடத்தினர் இது தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம், தலைமையில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் இராணுவத் தளபதியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்ததாக அறியக்கிடக்கிறது.

பாதுகாப்பு படையினர் பயங்கரவாதத்தை வெற்றிகரமாகத் தோற்கடித்து வருவதை எல்லா இனத்துவ மக்களும் பெரிதும் மதித்து வரும் இந்த வேளையில் தளபதி இவ்வாறு கூறி வைத்தது ஆச்சரியமாயிருப்பதாக கபீர் ஹாசிம் கூறியதாகவும், கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டதாக குறிப்பாக முஸ்லிம் மக்கள் இராணுவத் தளபதிக்கு அதிகளவு மதிப்பளித்துள்ளனர். முஸ்லிம்களும் சிங்களவர்களும் இரத்த உறவினர்கள். மற்றும் முஸ்லிம்கள் ஒரு போதும் தேவையற்ற கோரிக்கைகளை முன்வைத்தது கிடையாது என்றெல்லாம் ஹாசிம் மேலும் குறிப்பிட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.

நாடு சிங்களவர்கட்குச் சொந்தம் பழைய கதை

இலங்கை சிங்கள பௌத்த நாடு,சிங்களவர்களுக்குச் சொந்தமானது எனக் கூறப்படுவது ஒன்றும் புதிய விடயமல்ல. இதுதான் அன்று வடக்கு, கிழக்கில் குறிப்பாக கிழக்கில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத் திட்டங்களை முடுக்கிவிட்ட டி.எஸ். சேனநாயக்க முதல், இன்று ஒற்றையாட்சி முறைமையில் மாற்றம் கிடையாதெனக் கங்கணம் கட்டி நிற்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வரையிலான நிலைப்பாடாகும். இதனைத் தான் இராணுவத் தளபதி நேரடியாகக் கூறி வைத்துள்ளார்.

இன்று ஏறத்தாழ 100% அரச நிறுவனங்கள் மற்றும் குறிப்பாக ஆயுதப் படையினர் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருப்பதையிட்டு பெரிதும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அதாவது, அது தனது வேலை அல்ல என்பதை அவர் எண்ணவில்லை என்ற அளவுக்கு இனவாத அரசியல் ஆயுதப் படைத் தலைமைகளையே ஆட்கொள்ளும் அளவுக்கு மோசமாக ஊடுருவியுள்ளதையே இது கோடிட்டுக் காட்டுகிறது. இந்த நாட்டு ஆளும் வர்க்கத்தினர் காலாதிகாலமாக சுயநல அரசியல் இலாபம் கருதி நாட்டு நலனைக் காற்றில் பறக்க விட்டுச் செயற்பட்டு வந்ததன் ஒட்டுமொத்த அறுவடையின் வெளிப்பாடகவே இதனை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

அன்று பொன்னம்பலம் இராமநாதன் கூறியது போலவே பரந்துபட்ட சிங்கள மக்கள் நல்ல குண இயல்புகளைக் கொண்டவர்கள் என்பதில் சந்தேகமில்லை. தமிழ் மக்களோடு ஒற்றுமையாக வாழ்வதற்கு அவர்கள் எதிரானவர்கள் என்று கூற முடியாது. ஆனால், ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தினர் வரித்துக் கொண்ட பெரும்பான்மை மேலாதிக்க நிலைப்பாடுதான் நாட்டின் நாசகார சக்தியாயுள்ளது. அதாவது, சிங்கள மக்களல்ல, சிங்கள பேரினவாத சக்திகளே நாட்டைப் படுகுழியில் தள்ளுவதற்கு அன்று முதல் செயற்பட்டு வந்துள்ளனர்.

அத்தகைய சக்திகள் தான் தமிழர் ஆயுதம் ஏந்திப் போராடுவதற்கும் விடுதலைப் புலிகள் அமைப்பினை பிரசவிப்பதற்கும் பெரிதும் பங்களிப்புச் செய்துள்ளனர் என்ற வரலாற்று யதார்த்தத்தினை உணர்ந்து அனைத்து மக்களையும் சமாதானப்பாதையில் பயணிக்க வைப்பதற்கான அரசியல் தீர்வு தான் நாட்டை மீட்க வல்லதே ஒழிய நிச்சயமாக யுத்தம் அல்ல என்பது விரைந்து உணரப்பட வேண்டும்.

வி.திருநாவுக்கரசு

No comments: