இனப்பிரச்சினையில் விஜயதுங்கவின் நிலைப்பாட்டால் தமிழ் மக்கள் வேதனை - சபையில் சம்பந்தன்

ஜனநாயக விழுமியங்களை பாதுகாக்க டி.பி. விஜயதுங்க அர்ப்பணிப்புடன் பணியாற்றிருந்தாலும் அவரது இனப்பிரச்சினை தொடர்பான கருத்துகள் தொடர்பில் தமிழ் மக்கள் பெரும் வேதனையடைந்திருந்தனரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற முன்னாள் ஜனாதிபதி டி.பி. விஜயதுங்க மீதான அனுதாபப் பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த இரா.சம்பந்தன் மேலும் கூறியதாவது;
டி.பி. விஜயதுங்க மதிநுட்பமானவர். கவர்ச்சிகரமானவர். ஆனால், அவர் தேசிய இனப்பிரச்சினை குறித்து வெளியிட்ட கருத்துகளோடு எம்மால் இணங்கிச் செல்ல முடியாது. அவரது கருத்துகள் தொடர்பில் தமிழ் மக்கள் மிகவும் வேதனையடைந்திருந்தனர்.
டி.பி. விஜயதுங்க ஒருபோதும் அரசியல் பதவிகளை நாடிச் சென்றவரல்ல. பிரேமதாச ஜனாதிபதியாகவிருந்தபோது பலர் பிரதமர் பதவியில் கண் வைத்திருந்தனர். ஆனால், அப்பதவி விஜயதுங்கவை நாடி வந்தது. அதேபோன்றே பிரேமதாசவின் மரணத்தின் பின் விஜயதுங்க ஜனாதிபதியானார்.
இலங்கையின் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய டி.பி. விஜயதுங்கவின் மறைவு அனைவருக்கும் இழப்பானது.

No comments: