இலங்கை பிரச்சினை தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் மறியல் போராட்டம் நடத்திய வைகோ கைது

மத்திய அரசைக் கண்டித்து இன்று சென்னையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார். அவருடன் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழக முதல்வர் கருணாநிதி துரோகம் இழைத்துள்ளதாக வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது சிங்கள இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த இனப் படுகொலையில் நாள்தோறும் ஏராளமான தமிழர்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், இனப் படுகொலையைக் கண்டித்தும், இலங்கைக்கு இராணுவ உதவி செய்யும் மத்திய அரசைக் கண்டித்தும், இலங்கை தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்து ஆகியவற்றை வழங்கிட மத்திய அரசின் அனுமதி வேண்டியும் மதிமுக சார்பில் இன்று மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அறிவித்தபடி இன்று காலை அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மதிமுக தொண்டர்கள் திரண்டனர். காலை 10 மணியளவில் வைகோ தொண்டர்களிடையே பேசினார். அப்போது அவர் பேசியதாவது: மத்திய அரசு இலங்கைக்கு இராணுவ ரீதியான உதவிகளைச் செய்து வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்தும்படி பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். அதில் இந்தியா வழங்கிய ராடார் கருவிகளை திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டிருந்தேன். அதற்கு பிரதமர் அளித்த பதில் கடிதத்தில் தமிழர்களுக்கு எதிராக ராடார் கருவிகள் பயன்படுத்தப்பட்டால், அவற்றைத் திரும்ப பெற்றுக் கொள்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் தொடர்ந்து இலங்கை இராணுவம் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து வருகிறது. அங்குள்ள தமிழர்களுக்கு மருந்து பொருட்கள், உணவு ஆகியவற்றை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்ப மத்திய அரசிடம் அனுமதி கேட்டோம். ஆனால் 18 மாதங்களாகியும் இதுவரை அனுமதி தரப்படவில்லை. இதனைத் தடுத்து நிறுத்தியதில் முக்கிய காரணம் தமிழக முதலமைச்சர் கருணாநிதி தான். இதனை அறுதியிட்டு குற்றஞ்சாட்டுவேன். ஈழத் தமிழர் படுகொலைக்கு முக்கிய காரணம் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகள் தான். ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பாகத் தந்தி கொடுக்கும்படி முதலமைச்சர் கருணாநிதி அவருக்கே உரித்தான ஜெகஜ்ஜால பாணியில் அறிக்கை விடுகிறார். கேட்ட இலாகாவைக் கொடுக்காவிட்டால் மந்திரி பதவி ஏற்க மாட்டோமென்று மிரட்டல் விடுத்த அவருக்கு மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிடாவிட்டால் கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று மிரட்டாதது ஏன்? அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துவோம் என்ற நாடகத்திற்கு நாங்கள் இடம்தரமாட்டோம். இவ்வாறு வைகோ பேசினார். முன்னதாக மதிமுகவின் மறியல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதிமுகவைச் சேர்ந்த முத்துசாமி வாழ்த்துரை வழங்கினார். தமிழர் தேசிய கட்சியின் தலைவர் பழநெடுமாறன், இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் ஆகியோர் பேசினர். இதைத் தொடர்ந்து கூடியிருந்த தொண்டர்களுடன் வைகோ, காயிதே மில்லத் கல்லூரியிலிருந்து சாஸ்திரி பவன் நோக்கி மறியல் போராட்டம் செய்வதற்காக அணி அணியாகப் புறப்பட்டுச் சென்றனர். அப்போது அங்கு கூடியிருந்த போலீசார் அவர்களைக் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

No comments: