ஐ.நா.வில் தமிழில் பேசவேண்டாம்; தமிழருக்கு உரிமை வழங்கினாலே போதும்: அரியநேத்திரன் எம்.பி.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஐ.நா.வில் தமிழில் பேச வேண்டியதில்லை. தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்கினாலே போதுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான பி. அரியநேத்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கல்வி அமைச்சின் கீழ் பரீட்சைகள் திணைக்களத்துக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் பேசும்போதே அரியநேத்திரன் எம்.பி. இவ்வாறு கூறினார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்;
வடக்கு, கிழக்கில் கல்வி தொடர்பாக பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. கல்வியில் வரலாறு என்பது முக்கியம். இலங்கையை பொறுத்தவரையில் வரலாற்றை மாற்றிக் கூறுவது இங்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
உதாரணமாக இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் கருத்து கூட வரலாற்றை திரிபுபடுத்துவதாக அமைந்துள்ளது. இலங்கை சிங்கள இனத்துக்குரியதென்ற தொனியில் கனேடிய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
அரசியல் வாதிகள் தங்களது அரசியல் தேவைகளுக்காக வரலாற்றை மாற்றிக் கூறி வந்த நிலையில், இராணுவத் தளபதியும் வரலாற்றை திரிபு படுத்துவதன் மூலம் தமிழ் மக்களை எப்படி அழிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
ஜனாதிபதி ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் தமிழில் பேசும்போது, இங்கு தமிழ் மக்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படுகின்றன. ஜனாதிபதி ஐ.நா.வில் தமிழில் பேச வேண்டியதில்லை. தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்கினால் மட்டுமே போதுமானது.
இதேநேரம், இனப்பிரச்சினைக்கு, பல்வேறு விடயங்கள் காரணமாக இருக்கின்ற போதிலும், கல்வி உரிமை மறுக்கப்பட்டதனாலேயே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராட ஆரம்பித்தனர்
யுத்தம் நிறுத்தப்பட்டால், இந்தக் குறை நிரப்பு பிரேரணைகள் தேவைப்படாது. செலவு குறைவடைந்து அபிவிருத்திகளையும் மேற்கொள்ள முடியும்.
இதேநேரம், மட்டக்களப்பு மாவட்டத்தில் 270 ஆசிரியர்கள் பற்றாக்குறையும் 75 விஞ்ஞான ஆசிரியர்கள் பற்றாக்குறையும் 66 கணித ஆசிரியர்கள் பற்றாக்குறையும் நிலவுகின்றன. தற்போது பட்டதாரிகள் உள்ளிட்ட ஆசிரியர்கள் நியமனங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில் இன்னும் நியமனங்கள் வழங்கப்படாத பல பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்றனர். எனவே, அந்தந்த பிரதேசங்களிலுள்ளவர்களுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப் படுமாயின் இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடியதாக இருக்கும் என்றார்.

No comments: