உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் கலைஞருக்கு வரைந்த மடல்

தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதிக்கு உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் வரைந்த மடல். அதன் விபரம் வருமாறு.
பேரன்பிற்குரிய மாண்புமிகு கலைஞர்,முத்தமிழ் அறிஞர் டாக்டர் மு.கருணாநிதி அவர்கள்.
தமிழக முதல்வர்
தமிழ்நாடு,
இந்தியா..

வணக்கம். வாழ்க வளமுடன்,
தங்களுக்கு 9 9 2008 அன்று எழுதிய கடிதப் பிரகாரம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக 06 10 2008 வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு 42 நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ள உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் போற்றுகிறது பாராட்டுகிறது.
அது மட்டுமல்ல தங்கள் உரையில் ஈழத் தமிழர்களின் புரட்சிப்பூ ,விடுதலைப் பூ, ஜனநாயகப் பூ,புதுமைப் பூ இரத்த அபிசேகம் நடைபெறாமலே வளர வேண்டும் என்ற கருத்து உலகத் தமிழர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத் தமிழர்களிடையே நாளைய வாழ்விற்கு உத்தரவாதம் இன்றி சொந்த நாட்டிலும் வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்துள்ளனர். சொந்த நாட்டில் எமது மக்கள் தினம் தினம் கொலை, கற்பழிப்பு, காணமல் போதல், சிறை, சித்திரவதை போன்ற கொடுமை நிலைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே தங்களுடைய காலத்தில் ஈழத்தமிழர்களின் உயிர்,உடமை மற்றும் உரிமைகளைப் பாதுகாத்திட மேலும் தங்கள் பணி தொடருவதுடன் தாய்த் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சேய்த் தமிழீழத்தில் வாழும் எமது தொப்புள்க்கொடி உறவுகளைக் காப்பாற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு உலகத்தில் வாழும் எட்டுக்கோடிக்கும் மேற்பட்ட தமிழர்களின் சார்பில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் தங்களை அன்புடன் வேண்டுகிறது.
நன்றி
பணிவன்புடன்
துரை.கணேசலிங்கம்
09 1 2008

No comments: