இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளர் அப்பதவியில் இருக்கத் தகுதி அற்றவர் - பிரதம நீதியரசர்


குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளரின் ஊழல் நடத்தை மற்றும் மக்களின் உரிமை மீறல் தொடர்பாக அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பணிப்பாளர் பதவியில் இருக்க அவர் தகுதியற்றவர் என்றும் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உத்தரவிட்டுள்ளார்.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவருமான வாசுதேவ நாணயக்கார மற்றும் நிஹால் அமரசேகர ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பான மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரின் நடவடிக்கைகள் தொடர்பில் பிரதம நீதியரசர் இந்தக் கடுமையான விமாசனத்தை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை கொழும்பு கொள்ளுப்பிட்டியில் இருந்து காலிமுகத்திடல் வரையுள்ள அனைத்து வீதி தடைகளையும் அகற்றுமாறு பிரதம நீதியரசர் சரத் என் சில்வா நேற்று (29) உத்தரவிட்டிருந்தார். மக்கள் சுதந்திரமாக பயணம் செய்யும் வகையில் இந்த வீதி தடைகளை அகற்றுமாறு நீதியரசர் காவற்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பொதுப் போக்குவரத்துக்களை இலகுவாக மேற்கொள்ளும் நோக்கில் டுப்ளிகேஷன் வீதியூடான ஒரு வழிபாதை போக்குவரத்து நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு அவர் பணித்துள்ளார். இதேவேளை வாகன நிறுத்த தடைத் தொடர்பான அறிவிப்பு பலகைகளை கொழும்பு நகரில் பொருத்துமாறும் கொழும்பு மாநகர சபைக்கு நீதியரசர் உத்தரவுபிறப்பித்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை ஆராய்ந்த போதே நீதியரசர் சரத் என் சில்வா இந்த உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். அண்மைய நாட்களில் நீதியரசர் சரத் என் சில்வா தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய பல்வேறு உயர்நீதிமன்ற தீர்ப்புகளை வழங்கிவருகிறார். இதனால் அவர் அதிகார தரப்பினரின் வெறுப்பிற்கு ஆளாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எவ்வாறெனினும் 2008 ஆம் ஆண்டு இறுதியுடன் அவர் ஓய்வு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: