இராஜதந்திர அழுத்தங்களால் அரசு தனது நிலைப்பாட்டைத் தளர்த்தியது! வன்னிக்கு மீண்டும் ஐ.நா.உணவு லொறிகள்


ஐ.நா.உட்பட எந்தச் சர்வதேச அமைப்புகளோ, அவற்றின் பிரதிநிதிகளோ வன்னிப்பக்கம் செல்ல அனுமதிக்க முடியாது என்று முரண்டு பிடித்துக்கொண்டிருந்த இலங்கை அரசு, உலகின் பல்வேறு பக்கங்களிலும் இருந்து வந்த இராஜதந்திர அழுத்தங்களால் தனது நிலைப்பாட்டைச் சற்றுத் தளர்த்தி, ஐ.நாவின் கண்காணிப்புடன் வழித் துணையுடன் உணவு லொறிகளை வன்னிக்குள் அனுப்ப இணங்கியிருக்கின்றது.
அதனைத் தொடர்ந்து வன்னியில் யுத்த நெருக்கடிகளில் சிக்கியுள்ள மக்களுக்கான உணவு விநியோகத்தை ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் ஆரம்பிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக உலக உணவுத் திட்டத்தின் அனுசரணையுடன் 60 உணவு லொறிகள் எதிர்வரும் வியாழக்கிழமை வன்னிக்குச் செல்கின்றன.
உணவு லொறிகளுடன் வன்னி செல்லும் கண்காணிப்பாளர்கள் அங்கு தங்கியிருந்துவிடாமல் பொருள்களை விநியோகித்துவிட்டு உடனடியாகத் திரும்பி வந்துவிடவேண்டும் என்றும் அறிவித்திருக்கின்றது.
வன்னியிலிருந்து சர்வதேச மனிதாபிமான அமைப்புகளை வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்த அரசு, மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான கட்டமைப்பு பலம் தன்னிடமுள்ளதாகத் தெரிவித்து வந்தது.
அண்மையில் நியூயோர்க்கில் நோர்வேயின் பிரதிநிதிகளைச் சந்தித்த ஜனாதிபதி எதிர்காலத்தில் அரசினூடாக மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையும் உத்தரவாதம்
எனினும் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் உட்பட மனிதாபிமான உதவிகளை அரச அதிபர்களிடமும் அவர்களது பிரதிநிதிகளிடமும் வழங்குவது குறித்து மனிதாபிமான அமைப்புகள் அதிருப்தி வெளியிட்டதுடன் மனிதாபிமான உதவி பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைவதற்கான உத்தரவாதம் வழங்கப்படவேண்டுமெனக் கோரியிருந்தன.
இதனை அடிப்படையாக வைத்து சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற அமைப்புகளின் கண்காணிப்பாளர்கள் அங்கு பிரசன்னமாகியிருப்பதற்கு அரசு அனுமதியளிக்கவேண்டுமென்றும் கோரப்பட்டது.
இந்த விடயத்தில் அரசு எதிர்கொண்ட சர்வதேச இராஜதந்திர அழுத்தங்கள் காரணமாக மனிதாபிமான உதவிகளை எடுத்துச் செல்லும் வாகனத் தொடரணியுடன் சர்வதேச கண்காணிப்பாளர்கள் செல்வதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை அத்தியாவசிய உணவுப் பொருள்களுடன் 60 லொறிகள் வன்னிக்குச் செல்லவுள்ளன என்று உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான தலைவர் முகமட் சலிகீன் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார். சர்வதேச கண்காணிப்பாளர்களின் வழித்துணையுடன் அடுத்தவாரம் வாகனத் தொடரணிகள் வன்னி செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விநியோகங்களை மேற்பார்வை செய்வதற்காக சர்வதேசப் பணியாளர்கள் வன்னிக்குச் செல்வதற்கும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் காலங்களில் வன்னிக்குச் செல்லவுள்ள பல வாகனத் தொடரணிகளுக்கான ஆரம்பமாக இது அமையும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வன்னியிலிருந்து சர்வதேச மனிதாபிமானப் பணியாளர்கள் வெளியேறி இரண்டு வாரங்களின் பின்னர் மீண்டும் உணவுப் பொருள்கள் அங்கு அனுப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் வன்னிக்கு உணவு விநியோகம் இடம்பெறவுள்ளமை, தீவிரமடைந்து வரும் மோதலில் சிக்கியுள்ள வன்னி மக்களை ஐக்கிய நாடுகள் மறந்து விடவில்லை என்பதைப் புலப்படுத்துவதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் பேச்சாளர் கோர்டென் வைஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நியூயோர்க்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கி மூன் சந்தித்தவேளை வன்னி மக்களின் நிலைமை குறித்து ஐ.நா. செயலர் கடும் கவலை வெளியிட்டார் என்றும் இதனையடுத்தே அரசு கட்டுப்பாடுகளைத் தளர்த்த முன்வந்ததாகவும் ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது.

No comments: