தனது பதவியை தக்க வைக்க ஈழத்தமிழர் விடயத்தில் மெளனம் காத்த கருணாநிதி தமிழக மீனவர் கொல்லப்படும் போதும் பேசாது இருப்பது வேடிக்கை.

பதவியைத் தக்க வைத்துக் கொள்கிற சுயநல நோக்குடன் இலங்கைத் தமிழர் நலனைக் காற்றில் பறக்க விட்டுள்ள முதலமைச்சர் கருணாநிதி இனியாவது தனது தவறை உணர்ந்து இலங்கையிலுள்ள இந்திய இராணுவப் பொறியியலாளர்களை திருப்பியழைக்க மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள பாரதிய ஜனதாக்கட்சியின் பொதுக்குழு இலங்கைத் தமிழருக்கு எதிராக இந்தியா செயற்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த சனியன்று (செப்27) சேலத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது அதில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களுக்கெதிராக இந்திய அரசின் செயற்பாடு அமைந்துள்ளது. இப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தான் ஒரே வழி. இராணுவத் தீர்வு சாத்தியமில்லை. இலங்கை இராணுவத்திற்கு உதவும் வகையில் இந்தியாவில் இருந்து இராணுவப் பொறியியலாளர்களை இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது கண்டிக்கத்தக்கது.

இத்தகைய செயலைத் தான் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அரசு செய்துள்ளதைக் கண்டிக்காமல் கருணாநிதி மௌனம் காப்பது கண்டனத்திந்குரியது.

தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள இலங்கைத் தமிழர் நலனைக் காற்றில் பறக்க விட்ட கருணாநிதி இனியாவது தனது தவறை உணர்ந்து இந்திய இராணுவப் பொறியியலாளர்களைத் திரும்பப் பெற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தி தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் உரிமையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தி உள்ளது.

No comments: