வலி.தென்மேற்கு பிரதேசத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம்

யாழ் மாவட்டம் வலிகாமம் தென்மேற்குப் பிரதேசத்தில் மறு அறிவித்தல்வரை இராணுவத்தினர் ஊடரங்குச்சட்டம் பிறப்பித்திருப்பதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று முற்பகல் கந்தரோடைப் பகுதியில் இராணுவத்தினருக்கும், பிறிதொரு குழுவினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றதாகவும், இரு தரப்பிற்குமிடையில் பரஸ்பரம் துப்பாக்கி மோதல்கள் இடம்பெற்றதாகவும் பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து மாசியப்பிட்டி, கந்தரோடை, சுண்ணாகம், உடுவில், மானிப்பாய், சண்டிலிப்பாய, சங்கானை உள்ளிட்ட பகுதிகளில் பகல் 1 மணிமுதல் மறு அறிவித்தல்வரை ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தொடர்பாக இராணுவத்தினர் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்து வருவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்தப் பகுதிகளூடான போக்குவரத்துக்களுக்கு இராணுவத்தினர் தடைவிதித்திருப்பதுடன், பொதுமக்களின் நடமாட்டம் அற்றிருப்பதாகவும் யாழ் பிராந்தியத் தகவல்கள் கூறுகின்றன.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து யாழ் நகரின் அன்றாட நடவடிக்கைகள் 12 மணியுடன் குழப்பமடைந்ததாகவும், யாழ் நகரிலிருந்த பெரும்பாலான கடைகள், அலுவலகங்கள் மூடப்பட்டு பொதுமக்கள் தத்தமது வீடுகளுக்கு விரைந்ததாகவும் தெரியவருகிறது.

No comments: