சிறிலங்காவின் மீது பொருளாதாரத் தடையை விதிக்கக் கோருக! புலம்பெயர் தமிழரிடம் ஐரோப்பிய தமிழர் பேரவை விடுக்கும் வேண்டுகோள்

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களே!
தமிழர் தாயகப் பகுதிகள் மீது முற்று முழுதான இராணுவ, பொருளாதார யுத்தத்தை ஏற்படுத்தி தமிழர் பலத்தை சிதறடித்து அவர்;களை தனக்கு கீழ்படியும் ஒரு இனக்குழுவாக மாற்றுவதற்கான முழுமுயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் மீண்டுமொருமுறை வரிந்து கட்டியிறங்கியுள்ளது.
இதன் ஒருகட்டமாக சிங்கள இராணுவ இயந்திரத்தை அப்பாவி தமிழ்பொதுமக்கள்மீது தொடர்ச்சியாக கட்டவிழ்த்துவிட்டு அவர்களை பால், வயது வேறுபாடின்றி கொன்றொழித்து வருகின்றது.
அண்மைய செஞ்சோலை, அல்லைப்பிட்டி, மூதூர் மற்றும் மன்னார் படுகொலைகள் சிறிலங்கா அரசின் இந்த இலக்கை அடைவதற்கானதொரு வழிமுறையே. அதன் அடுத்தகட்டமாக தமிழர் வாழ்வாதாரத்தை சிதைத்து அவர்களை பட்டினிபோட்டு இனப்படுகொலை செய்வதை குறியாகக் கொண்டு தமிழர் தாயகப் பகுதிகளை நோக்கிய சகல வழங்கல் பாதைகளையும் மூடி ஒரு இறுக்கமான பொருண்மிய தடையை ஒட்டு மொத்த தமிழினம் மீதும் சிங்களஅரசு அமுல்படுத்தி வருகின்றது.
சிறிலங்கா அரசின் இந்த நாசகார திட்டத்தை தவிடுபொடியாக்க தாயகத்தில்; எதிரியின் இராணுவத்தை விரட்ட தமிழர்சேனை முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதேவேளை சிறிலங்கா அரசின் இந்த கபட எண்ணத்தை அடையாளம் கண்டு அதன் இனவாதநோக்கை அனைத்துலக அரங்கில் அம்பலப்படுத்தி சிறிலங்காவின் தமிழர் மீதான அடக்குமுறைக்கு முதுகெலும்பாக தொழிற்படும் அதன் பொருளாதாரத்தை முடக்கவேண்டிய பெரும்பொறுப்பு புலத்தில் வாழும் எம்தமிழ் உறவுகளுக்குரியதாகின்றது.
எனவே தமிழர் தாயகத்தின் மீது சிறிலங்கா ஏற்படுத்திய பொருளாதாரத்தடைக்கு ஒப்பான ஒரு பொருளாதாரத்தடையை சிறிலங்காமீது அனைத்துலக சமூகம் ஏற்படுத்தக் கூடிய ஒரு ஏதுநிலையை ஏற்படுத்தும் ஒருமுன்முயற்சிக்கு உங்கள் அணைவரதும் ஒத்துழைப்பு வேண்டிநிற்கப்படுகின்றது. சிறிலங்கா அரசாங்கத்தின் அனைத்துலக சட்டங்களுக்கு முரணான இனத்துவேச, இனவொடுக்கு, இனவழிப்பு நடவடிக்கைகளை வெளிக்கொணர்ந்து அணைத்துலக சமூகத்தினையும் சிறிலங்காவினூடன கீழ்காணும் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துமாறுகோரும் ஒரு பரந்துபட்ட போராட்டத்தை புலம்பெயர்ந்து வாழும் எம்தமிழ் உறவுகளை முன்னெடுக்குமாறு வேண்டுகின்றோம்
1. அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிராக பிரயோகிக்கப்படும் அனைத்து வகையான ஆயுத ஏற்றுமதிகளையும் சிறிலங்காவிற்கு விற்பனை செய்வதை முற்று முழுதாக நிறுத்தக் கோருதல்.
2. தமிழருக்கெதிரான அடக்குமுறைகளினை முடிவிற்கு கொண்டுவரும்வரை சிறிலங்காவிற்கான அனைத்துலக நிதியுதவிகளை நிறுத்தக் கோருதல்.
3. சிறிலங்காவிற்கு உல்லாசப்பயணிகள் வருவததை நிறுத்தக் கோருதல்.
4. சிறிலங்காவில் முதலீடு செய்வதை நிறுத்தக் கோருதல்.
5. சிறிலங்காவின் உற்பத்தியாகும் பொருட்களை புறக்கணிக்கக் கோருதல்.
6. புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் சிறிலங்கா வங்கிகளுக்கூடாக தாயக உறவுகளுக்கு பணம் அனுப்புவதை தவிர்த்து வேறுவழிகளை கையாளுதல்.
7. சிறிலங்கா வங்கிகளில் வைப்பிலிட்டுள்ள பணத்தை உடனடியாக மீளப்பெறுதல்.
8. சிறிலங்கா விமான சேவையில் பயணித்தலை தவிர்த்தல்.

No comments: