வவுனியா வைத்தியாலைக்கு அதிகளவான காயமடைந்த இராணுவத்தினர்: வைத்தியர்கள் பற்றாக்குறையெனத் தகவல்

வன்னி முன்னரங்கப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் மோதல்களில் காயமடையும் அதிகளவான இராணுவத்தினர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், இவ்வாறு அனுமதிக்கப்படும் இராணுவத்தினர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்குப் போதுமான வைத்தியர்கள் இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்கள் தட்டுப்பாட்டால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் பெரும் எண்ணிக்கையான காயமடைந்த இராணுவத்தினர்களுக்கு சிகிச்சையளிப்பதில் சிக்கல்கள் தோன்றியிருப்பதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் நடைபெற்றுவரும் மோதல்களில் காயமடையும் இராணுவத்தினர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றபோதும் அவர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கு வவுனியா வைத்தியசாலையில் ஒரு சத்திரசிகிச்சை நிபுணரும், ஒரு மயக்க மருந்து செலுத்தும் நிபுணர் மாத்திரமே காணப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் வைத்தியர் உபுல் குணசேகர தெரிவித்தார்.
அரசசார்பற்ற நிறுவனங்களுடன் தொடர்புடைய இரண்டு சத்திரசிகிச்சை நிபுணர்கள் வைத்தியசாலையை விட்டுச் சென்ற பின்னர் சத்திரசிகிச்சை நிபுணரும், மயக்கமருந்து செலுத்தும் நிபுணரும் வைத்தியசாலையில் எந்தநேரமும் கடமையில் இருக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
“கிளிநொச்சி மோதல்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கணிசமான அளவு காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் வைத்தியசாலையில் 80 வைத்தியர்கள் மாத்திரமே உள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் மேலதிகமான வைத்தியர்களும், பணியாளர்களும் அவசியம்” என வைத்தியர் குறிப்பிட்டார்.
அத்துடன், வைத்தியசாலையுடன் தொடர்புடைய வைத்தியர்களுக்கான போதியளவு அடிப்படை வசதிகள் இல்லையெனவும் குறிப்பாக வைத்தியர்களுக்கான போக்குவரத்து வசதிகள் இல்லையெனவும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.
“இவ்வாறான அடிப்படை வசதிகள் சுகாதார அமைச்;சினால் வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் கடமையாற்ற பல வைத்தியர்கள் முன்வருவார்கள்” என்றார் வைத்தியர் உபுல் குணசேகர கூறினார்.
எரிபொருள் மானியம் வழங்கக் கோரி வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள் கடந்த வாரம் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தமையையும் அவர் நினைவுகூர்ந்தார்.

No comments: