பொது மக்கள் மீது யுத்தம் திணிக்கப்படாது பார்த்துக்கொள்வது ஜனநாயக அரசாங்கத்திற்கு அவசியம் - பெளச்சர்

இலங்கையில் மோதல்களுக்குள் சிக்குண்டிருக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பது ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கடமையென அமெரிக்காவின் ஆசிய விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளர் ரிச்சட் பௌச்சர் தெரிவித்தார்.

இலங்கையின் வடபகுதியில் அதிகரித்திருக்கும் மோதல் சம்பவங்கள் குறித்தும், அங்குள்ள மக்களின் நிலைமைகள் தொடர்பாகவும் இலங்கைக்கு உதவிவழங்கும் இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக பௌச்சர் கூறினார்.

“வடக்கை நோக்கி மோதல்கள் நகர்ந்து வருகின்றன” என்று நியூர்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பௌச்சர் குறிப்பிட்டார்.

“மோதல்களுக்குள் சிக்குண்டிருக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பது ஜனநாயக அரசாங்கத்தின் கடப்பாடு. பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருக்கும் மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்” என பௌச்சர் கூறினார்.

மோதல்களில் ஈடுபட்டிருக்கும் இரண்டு தரப்பும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியமென்பது இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் முக்கியமாக வலியுறுத்தப்பட்டது என அவர் தெரிவித்தார்.

“இலங்கையின் பிரதிநிதிகளை நாங்கள் அனைவரும் நியூயோர்க்கில் சந்தித்துக் கலந்துரையாடுவோம்” என்றார் பௌச்சர். சில அரசியல் கட்சிகள் தமது செயற்பாடுகளின் போது விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான மோதல்கள் வன்னியில் தொடர்ந்தும் நடைபெற்றுவரும் நிலையில் ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நோர்வே ஆகிய இலங்கைக்கு உதவிவழங்கும் நாடுகள் நேற்று புதன்கிழமை நியூயோர்க்கில் கூடி, இலங்கையின் பிந்திய நிலவரம் தொடர்பாகக் கலந்துரையாடியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: