வன்னிப்பெரு நிலப்பரப்பில் பரிதவிக்கும் மக்களுக்கு உணவுப்பொருட்கள் அனுப்புங்கள்: த.தே.கூ. வலியுறுத்தல்


வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்து தவிக்கும் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை அனுப்பி வைக்க சிறிலங்கா நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற எரிபொருட்கள் விலையேற்றம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பேசும்போதே சேனாதிராஜா மேலும் கூறியதாவது:

உலக சந்தையில் எண்ணெய் விலையேற்றம், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்பவையே இலங்கையில் பிரதான எரிபொருள் விலையேற்றத்துக்கான பிரதான இரண்டு காரணி என வர்த்தக அமைச்சரான பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரிக்கும் போது இங்கு எரிபொருட்களின் விலையை அதிகரிக்கும் அரசாங்கம் அங்கு எண்ணெய் விலை குறைவடையும் போது மட்டும் இங்கு குறைக்காதது ஏன் என்று கேட்கின்றோம்.

ஒரு அரசாங்கத்தால் கஸ்டப்படும் மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண உதவிகளைக் கூட இந்த அரசாங்கம் வழங்க தவறிவிட்டது.

வடக்கு-கிழக்கில் குறிப்பாக வடக்கில் இன்று மீன்பிடிக்கைத்தொழில் இராணுவத்தினரால் முடக்கப்பட்டுள்ளது.

வடக்கில் உள்ள 70 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

விவசாயமும் செய்ய முடியாத நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. உலக சந்தையில் எண்ணெய் விலையை காட்டி அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளைக் கூட்டிக் குறைத்தாலும் அதை வாங்க சக்தியற்ற நிலைமையில் வடக்கு மக்கள் இருக்கின்றனர்.

வரி விதிப்பதற்கு போரை காரணமாகக் காட்டுகிறார்கள் எதற்காக இந்த போர்? ஐக்கிய தேசியக் கட்சியின் போது வரி அதிகரிக்கப்படுவதாகக் கூறிய தற்போதைய அரசாங்கம் கடந்த ஆட்சியிலும் வரிகள் அதிகரிக்கப்பட்டதாக கூறிக்கொண்டு தானும் அதிகரிப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது.

தமிழ்த் தேசியத்தை அழிப்பதற்காக வரிகளை அதிகரித்தும் பெரும் நிதியை செலவிடும் அரசாங்கம் மக்களின் தேவைகளை நிறைவேற்றக்கூட தவறி வருகிறது. தமிழ்த் தேசியத்தில் அரசாங்கம் எரிய விட்டிருக்கும் இந்த தீ சிங்களப் பகுதிகளிலும் எரியும்.

பயங்கரவாதம் என்ற போர்வையில் ஒரு தேசிய இனத்தின் உரிமைப் போராட்டத்தை மூடி மறைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த அரசாங்கம் இந்த நாட்டில் போர் நடைபெறும் வரை நாட்டின் பொருளாதாரத்தையோ மக்களையோ சுதந்திரமாக செயற்பட வைக்க முடியாது.

எமது தமிழினத்தை அழிக்க போருக்காகப் பயன்படுத்தப்படும் நிதி இந்த நாட்டின் அபிவிருத்திக்கு தேவைப்படுகின்றது என்பதனாலேயே அதற்குப் பதிலாக இன்று வரிச்சுமைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. தமிழ் மக்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்படும் வரை நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாது.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து அம்மக்கள் தங்களை தாங்களே ஆட்சி செய்து கொள்ளும் உரிமை வழங்கப்பட வேண்டும். அதனை விடுத்து தமிழ் மக்களின் உரிமைகளை நசுக்குவதற்காக எரிகிற நெருப்பில் பேரினவாதம் என்ற எண்ணெயை ஊற்றி வரிச் சுமைகளையும் அதிகரித்து வருகின்றீர்கள்.

எனவே, வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்து அல்லலுறும் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் சென்றடைவதற்கு நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார் அவர்.

ஆதாரம்: தினக்குரல்

No comments: