இலங்கை மீதான விசாரணை அவசியமற்றது - இலங்கை வெளிவிவகார அமைச்சர்

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி வரிச் சலுகையை நீடிப்பதற்காக விசாரணைகள் நடத்தப்படுவது தேவையற்றது என இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார ஆணையாளர் பெனிடா பெரேரோ வொல்னரைச் சந்தித்தபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார். உத்தேச விசாரணை தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியேகபூர்வ அழைப்புக்காகக் காத்திருப்பதாகவும், அழைப்புக் கிடைத்ததும் உரிய பதில் வழங்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி வரிச்சலுகையை நீடிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுக்கும் எந்தவொரு நடவடிக்கைகக்கும், நாட்டின் தேசிய பாதுகாப்பு, ஆட்புல ஒருமைப்பாடு என்பவற்றைக் கவனத்தில்கொண்டு உரிய பதில் வழங்கப்படும் என ரோகித்த போகல்லாகம சுட்டிக்காட்டினார்.

வன்முறைகளின் பின்னர் நாட்டை முன்னேற்றுவதற்கான திட்டங்களை இலங்கை முன்னெடுத்துவரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் இவ்வாறு நடந்துகொள்வது கவலையளிப்பதாகவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இலங்கை நெருங்கிய உறவுகளைப் பேணுவதற்கே விரும்புவதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கிலுள்ள மக்களின் சந்தைவாய்ப்புக்களை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை அபிவிருத்தி செய்யும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாகவும், ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் இவ்வாறான நடவடிக்கைகள் அவற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கப் படைகள் முன்னெடுத்திருக்கும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகக் கேட்டறிந்த பெனிடா, இந்த இராணுவ நடவடிக்கைகளின் போது பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் எனவும் கூறினார்.

No comments: