தென்மராட்சியில் சிறீலங்கா படையினரது அடக்கு முறைகள்


யாழ் தென்மராட்சியில் சிறீலங்கா படையினரது கட்டுப்பாடுகள் காரணமாக தமது குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, சீவல் தொழிலாளிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


தென்மராட்சியில் மரங்கள் நிறைந்த பகுதிகளில் பல முகாம்களை அமைத்துள்ள சிறீலங்கா படையினர், தமது முகாமிலிருந்து 500 மீற்றர் தொலைவில் தொழில் செய்ய தடை விதித்துள்ளனர்.


கச்சாயில் முகாம் ஒன்றிற்கு அருகில் தொழில் செய்த இரண்டு சீவல் தொழிலாளிகள் சிறீலங்கா படையினரால் நேற்று புதன்கிழமை கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தனர்.


இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இருவரின் குடும்பத்தினரும் படையினரிடம் தமது வறுமை நிலை பற்றி எடுத்துக் கூறியபோது, எச்சரிக்கை செய்யப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


முகாம்களுக்கு அருகிலுள்ள பனை, தென்னை மரங்களில் சீவல் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள், விடுதலைப் புலிகளுக்கு உளவு நடவடிக்கையில் ஈடுபடலாம் என படையினர் சந்தேகிக்கின்றனர்.


இதேபோன்ற தடைகள் கடற்றொழிலாளர்களுக்கும் நீடிக்கப்பட்டு வருவதால், அவர்களது பல்லாயிரக்கணக்கான குடும்பங்களும் யாழ் குடாநாட்டில் பாதிக்கப்பட்டுள்ளன.


தொன்டமனாறு பகுதியில் தூண்டில் மீன்பிடித்தொழிலாளர்கள் தமது தொழிலில் ஈடுபடவும் கடந்த சில நாட்களாக சிறீலங்கா படையினர் அனுமதி மறுத்து வருகின்றனர்.


அத்துடன், இடைக்காடு உயர் பாதுகாபபு வலய மண் அரண்களுக்கு அருகில் வெங்காயச் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, மழை கால ஆரம்பத்தில் வேலிகள் தழைக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், அனைத்து வேலிகளையும் அரைவாசி உயரத்துடன் வெட்டுமாறு படையினரால் பணிக்கப்படுகின்றது.

No comments: