சாட்சியமில்லாது போகும் வன்னிமக்களின் அவலம்- வெளியேறிய தன்னார்வ தொண்டு பணியாளர் ஒருவரின் வேதனைக் குரல்!!


இலங்கையில் மனிதநேயப் பணியாளர் ஒருவர் வன்னியில் இருந்து வெளியேறியதனால் தனக்கு ஏற்பட்ட வலி என்னும் தலைப்பில் கடந்த 23ம் திகதி செவ்வாயன்று பிபிசி ஆங்கில இணையத்தளச் செய்திக்கு விபரித்த தகவல்களின் தமிழ் வடிவம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களைக் கைப்பற்றும் நோக்கத்தோடு இலங்கை இராணுவத்தின் வலிந்த தாக்குதல்கள் மிகவும் ஆக்ரோஷமாக இடம்பெறுவதால் வடக்கில் மனிதாபிமான நிலையானது மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதோடு மிகவும் பாரதூரமான நிலையையும் தொட்டு நிற்கின்றது. மோதல்கள் காரணமாக 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ள சூழலில் ஒரு வாரத்திற்கு முன்பு ஐ.நா. சபையும் மற்றும் அரச சார்பற்ற தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களும் வெளியேறியுள்ளார்கள். ஒரு தன்னார்வ தொண்டர் நிறுவனத்தை சேர்ந்த பணியாளர் வன்னியில் இருந்து வெளியேறிச் செல்கையில் எவ்வளவு கடினமாக இருந்தது என தனது மன உணர்வுகளை விபரிக்கின்றார்.

கிளிநொச்சியில் கடந்த சில வாரங்களில் நான் இருந்தபோது ஒரு மிகப் பெருமெடுப்பிலான இராணுவ முன்னெடுப்பு தென்மேற்கு முனையில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான இந்த யுத்தத்தின் தீவிரமானது நகர்ப்புறத்தை நோக்கி அண்மித்து வருவதாகவே தென்படுகின்றது. இந்த நடவடிக்கைகளினால் பாரிய அளவிலான மனித இடப்பெயர்வு அவலங்கள் வன்னி மண்ணில் அரங்கேறுகின்றது. நான் முன்னொருபோதும் கேட்காத அளவிற்கு சத்தங்களும் துப்பாக்கிச் சூடுகளும் மிக நெருக்கமான சண்டைகள் நடைபெறுவதை உணர்த்தின, இரவு பகல் வித்தியாசமின்றி தொடர்ச்சியாக குண்டுகளும் ஆட்டிலெறி, மற்றும் பல்குழல் எறிகணை தாக்குதல்களும் சற்றுத் தள்ளி வீழ்ந்து வெடிப்பதையும் கணிக்க முடிந்தது.

நாளுக்கு நாள் ஆக்ரோஷமான மிகமோசமான ஆட்டிலெறி எறிகணை வீச்சுக்கள் மிக அண்மையில் நெருங்கி வீழ்ந்து வெடிப்பதையும் உணர்ந்தேன். ஒவ்வொரு முறையும் செல்கள் விழுந்து வெடிக்கும்போது எனது அலுவலகம், எனது படுக்கையறை, எனது சமையலறை ஏன் எனது பதுங்குகுழி கூட அதிர்வுகளால் நடுங்கிக்கொள்ளும். நிஐ யுத்தம் ஒன்று வாசல்படியை நெருங்கி வருவதையே எனக்கு அது உணர்த்திற்று. ஒரு தன்னார்வத் தொண்டர் நிறுவனப் பணியாளனாக தினமும் யுத்த அவலத்தால் இடம்பெயர்ந்து திரண்டு வரும் மனித ஜீவன்களுக்கு தேவையான அடிப்படை வாழ்வாதாரத்தை வழங்குவதில் மிகவும் சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொண்ட அதேவேளை சில கணங்களில் செய்வதறியாது திணறிவிட்டேன்.

ஆரம்பத்தில் வன்னியின் தென்மேற்குப் பகுதிகளில் இருந்தே மக்கள் ஆட்டிலெறி சத்தத்தின் அதிர்வுகளாலும் பயத்தினாலுமே வேறு இடங்களை நோக்கி ஓடத் தொடங்கினர். மிகமிக மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே வாகன வசதிகள் இருந்ததால் மக்கள் மிகக் குறுகிய தூரத்திற்கே இடம்பெயர முடிந்தது, அங்கு மரநிழல்களில் அடைக்கலம் தேடிக் கொண்டார்கள். இராணுவம் தொடர்ச்சியாக தமது இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னேறியதால் மீண்டும் குண்டு மழையில் இருந்து தப்பிப்பதற்காக ஒருசில தினங்களில் மீண்டும் இடம்பெயரவேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டனர்.

தன்னார்வ நிறுவனங்களின் பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பொதுவாக வன்னி தென்மேற்குப் பகுதிகளில் எமது பணியாளர்கள் கடமை புரியவில்லை. ஆனால் யுத்தத்தின் தீவிரத் தன்மையாலும் இராணுவ முன்னேற்றத்தாலும் மக்கள் கிளிநொச்சியை அண்டிய பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து வந்ததால், அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதுடன் அவர்கள் ஒருதடவையல்ல இரண்டுதடவையல்ல பல தடைவைகள் இடம்பெயர்ந்த சோகமான கதைகளையும் கேட்க முடிந்தது.

அத்துடன் அம்மக்கள் மிகவும் பசியுடனும், களைப்புடனும், அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்துடனும் காணப்பட்டனர். அதில் இருந்த தந்தையர் தமது வாழ்வாதாரத்தை முற்றாக இழந்துள்ளாகள். தொழில்களை இழந்ததோடு தமது சொத்துகளாக இருந்த மீன்பிடிப் படகுகள், வலைகள், படகு, இயந்திரம் என்பவற்றையும் இழந்து போக்கற்றவர்களாக காட்சியளித்தனர். அங்கிருந்த தாய்மார் உணர்வுகளின் உச்சத்தில் நின்று குடும்பத்திற்கான உணவு, உறைவிடம் இல்லாமல் அல்லாடும் சோகக் காட்சி இன்னும் என் மனதில் தெரிகின்றது. சிறுவர்களோ பள்ளிப்படிப்பை மறந்து பல மாதங்கள் கடந்துவிட்டது. தன்னார்வ மனிதநேயப் பணியாளர்களாக நாம் எம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம். தலைக்கு மேல் ஒரு கூரை, தண்ணீர் வசதி, களிவறை வசதி என்பவற்றை எம் சக்திக்குட்பட்டு செயற்படுத்தினோம்,

தவிரவும் அவசர தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், கிளிநொச்சியைப் பாதுகாப்பான இடமாகக் கருதியதாலும் அனைத்து வசதிகளையும் முடிந்தளவு நிறைவேற்றினோம். ஆனாலும் நாட்கள் நகர நகர நிலைமை மோசமாகத் தொடங்கியது. அதாவது குண்டுகளும் ஆட்டிலெறிகளும் கிளிநொச்சி நகருக்குள்ளும் அதனையண்டிய பகுதிகளிலும் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கியது. இதனால் மனிதநேயப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமில்லாத ஒரு இறுக்கமான நிலை தோன்றியதால் எமது பணியைத் தொடரமுடியாத கையறு நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

பாதுகாப்பு நிலைவரமானது பாரதூரமான உச்சநிலையை எட்டியது. ஆட்டிலெறி எறிகணைத் தாக்குதல்களும், விமான குண்டுவீச்சு தாக்குதல்களும் கிளிநொச்சியில் சாதாரண நிகழ்வாக இடம்பெற ஆரம்பித்தது. இனிமேலும் மனிதநேய தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தை வழங்க முடியாது எனவும், இதனால் வன்னியை விட்டு வெளியேறும் வண்ணம் இலங்கை அரசால் எமக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. அத்தருணத்தில் மொத்தமாக 10 சர்வதேச மனிதாபிமானப் பணியாளர்கள் வன்னியில் இருந்தோம். எமது அலுவலகங்களை அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்கு நகர்த்தவேண்டிய மனதை உருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

உணர்வுகளும் உள்ளக்குமுறல்களும் அதிகமாக இருந்த நேரமது, நாம் வன்னியை விட்டுப் புறப்பட எடுக்கும் ஆயத்தங்கள் எமக்கு ஒருவித குற்ற உணர்வையும் எமது கையாலாகாத்தனத்தையும் புலப்படுத்தியது. இதே மக்களுக்கு, மக்களுடன் சேர்ந்து பணியாற்றி அவர்களுடனான நல்லுறவு ஒன்றை வளர்த்து, அவர்களுக்கு மனிதாபிமான தேவை பாரிய அளவில் தேவைப்படும் நேரத்தில் இம்மக்களைக் கைவிட்டுப் பிரிய நேருகின்றதே என்ற மனஅழுத்தம் என்னை முழுமையாக ஆட்கொண்டது. எமது வேலைத்திட்டங்களை கைவிட்டுச் செல்வதென்பது தொழில்ரீதியாக மிகவும் கடினமாக இருந்தது.

ஆனாலும் எமது உள்ளுர் பணியாளர்களின் உணர்வுகளும்,ஏக்கங்களும் எம்மை மிகவும் வருத்தியது. வன்னியில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்வதானால் த.வி.புலிகளிடம் அனுமதி பெற்றாகவேண்டும். அதாவது பாஸ் நடைமுறை. எமது உள்ளுர் பணியாளர்கள் எதாவது ஒரு காரணத்தால் வன்னியை விட்டு வெளியேற பாஸினைப் பெற முடியவில்லை. பாஸ் நடைமுறையானது தனி நபர்களுக்கே வழங்கப்படும், குடும்பமாகப் பாஸ் பெறமுடியாது. எனவே எமது உள்ளுர் பணியாளர்கள் குண்டு மழைக்குள்ளும், வான்வெளித் தாக்குதலிலும் தமது குடும்பத்தாரைத் தவிக்கவிட்டு எம்மோடு அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து தமது வாழ்வாதாரத்தைத் தேடுவதென்பது நடைமுறைக்கு ஒவ்வாதது,

எனவே அவர்கள் தமது தொழிலையும் இழந்து தொடர்ந்தும் வன்னியிலேயே தங்கியிருக்க வேண்டியுள்ளது. இவர்கள் வலோத்காரமாக புலிகளால் போரில் அந்த விமானம் வானத்தில் இருந்து கீழ் நோக்கி வரும்போது அதன் இயந்திரம் ஏற்படுத்திய அச்சமூட்டும் பயங்கர ஒலியையும், எனக்கு மிக அருகாமையில் வீழ்ந்து வெடித்த குண்டின் தாக்கத்தையும் என்றுமே என்னால் மறக்கமுடியாது. எனது கடைசி ஞாபகமானது இவ்வாறன குண்டுத் தாக்குதல்களின்போது மக்கள்படும் வேதனைகளை ஒருமுறை என் மனக்கண் கொண்டு வருகிறது.

ஒரு மனிதநேயப் பணியாளர் என்ற வகையில் எமக்காக அமைக்கப்பட்ட பதுங்குகுழிகள் கொங்கிரீட்டினால் ஆனது, ஆனால் சாதாரண மக்களின் பதுங்குகுழிகளோ வெறும் தரையில் அமைக்கப்பட்டதோடு சேறு சகதிகளும் காணப்படும். ஆட்டிலெறி மற்றும் விமானக் குண்டுவீச்சு தாக்குதல்களின்போது சிறுவர்கள் அச்சத்துடன் நடுங்கிய வண்ணம் தமது அன்னையரைக் கட்டிப் பிடிப்பதையும்; தாமும் நடுங்கியவாறு அந்த பிஞ்சுக் குழந்தைகளை தாய்மார் ஆசுவாசப்படுத்துவதையும் என் கண்கள் ஊடாகக் கண்டேன்.

கடந்த செப்ரெம்பர் 12ம் திகதி வெள்ளியன்று கிளிநொச்சி நகரைவிட்டு வெளியேறுவதாக முடிவானது. ஆனால் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் எம் கட்டிடத்தைச் சூழ்ந்து எம்மை விட்டு பிரியவேண்டாம், எம்மை விட்டு செல்ல வேண்டாம் என அழைப்புவிட்ட வண்ணம் இருந்தனர். ஆர்பாட்டத்தில் அமைதியாகவும் அதேவேளை கண்ணியமாகவும் நடந்துகொண்டனர். நாம் தன்னார்வ தொண்டர் நிறுவனங்களின் உண்மை நிலையை எடுத்து விளக்கியதும் அம்மக்கள் நமது வெளியேற்றத்தைப் புரிந்துகொண்டதோடு இனிவரும் நாட்களில் தமது நிலையை தாமே எவ்வாறோ சமாளிப்போம் என எமக்கு தெரிவித்தனர். ஆனாலும் இனிவரும் காலங்களில் மனிதநேய நிறுவனங்களின் வெளியேற்றத்துடன் வன்னியில் நடக்கப்போகும் அக்கிரமங்களுக்கு சாட்சியுமில்லாது போய்விடும் என்ற அச்சமே அம்மக்கள் மத்தியில் மேலோங்கியிருந்ததை என்னால் உணரமுடிந்தது.

எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விபரீதங்களை கண்டுகொள்ள யாருமே இருக்கமாட்டார்கள். மூன்று நாட்களாக அமைதி ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது. எம் அனைவராலும் மக்களின் அச்சஉணர்வுகளை புரிந்துகொள்ள முடிந்தது, எனினும் எமது கைகள் கட்டப்பட்ட நிலையில் எதுவுமே செய்யமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டோம். போர்க்கள நிலைமை படுமோசமாகி வருவதை உணர்ந்து கொண்டோம். சில உதவி நிறுவனங்கள் தங்கள் கட்டிடத் தொகுதியையே கைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களைத் தேடிக் கொண்டனர், ஏனெனில் அவர்கள் இருக்கும் கட்டிடத்திற்கு சில நூறு மீட்டர்களுக்கு அப்பால் ஆட்டிலெறி செல்கள் வந்து விழ தொடங்கிவிட்டிருந்தன.

தற்போது ஆட்டிலெறி மற்றும் விமாக்குண்டு வீச்சுக்களும் கணிசமான அளவு அதிகரிக்கப்பட்டிருந்ததால் கடைசி இரு தினங்களும் பெரும்பாலான நேரத்தை பதுங்குகுழிகளிலேயே கழிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. விபரிக்க முடியாத அளவிற்கு குண்டுச் சத்தங்களும், விமானத்தில் இருந்து போடப்படும் குண்டுகளும் முழு நகரத்தையும் நடுங்கவைத்துக் கொண்டிருந்தது. இதைவிட மேலதிகமாக உலங்கு வானூர்தியில் இருந்தும் றொக்கற்றுக்கள் நகர் பகுதிகளையும் புறநகர் பகுதிகளையும் ஏகதாளத்தில் தாக்கின. அனைவரும் பயத்தில் உறைந்த நிலையிலேயே இருந்தோம். கிளிநொச்சி பிரதேச மக்களும் தமது மூட்டை முடிச்சுகளுடன் நகரை விட்டு வடக்கு நோக்கி ஆட்டிலெறி எல்லைக்கு அப்பால் செல்லத் தொடங்கி விட்டனர். மறுநாளே கிளிநொச்சியை விட்டு நாம் புறப்படாவிட்டால் நாமும் வன்னியில் சிக்கிவிடும் அபாயத்தை தெளிவாக உணர்ந்து கொண்டோம்.

செப்ரெம்பர் 16ம் திகதி காலைநேரம் எமது வாகனங்கள் அனைத்தும் ஒரு தொடரணியாக எமது கட்டிடத் தொகுதிக்கு முன்னால் புறப்படத் தயாராகின்றது. ஆட்டிலெறி தாக்குதல்களும் வான்குண்டு தாக்குதல்களும் தொடர்ந்த வண்ணமேயிருந்தது. இருப்பினும் எமது வாகனத் தொடரணி கிளிநொச்சியில் இருந்து புறப்பட்டு அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி விரைந்தது. எம்மோடு சேர்ந்து பணிபுரிந்த பல பணியாளர்களை பாஸ் கிடைக்காத காரணத்தால் வன்னியிலேயே விட்டு நாம் திரும்பவேண்டிய நிலை. கண்களில் கண்ணீர் மல்க அவர்களைப் பிரிந்தேன், பயத்தினால் ஏற்பட்ட அவர்களின உணர்வுகளையும், உள்ளக்குமுறல்களையும் எண்ணி குற்ற உணர்வுடனேயே வன்னியை விட்டு வெளியேறினேன். எனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள குண்டு துளைக்காத ஆடைகளுடன் வாகனத் தொடரணியில் நான் புறப்படும்போது அங்கு கூடி நின்ற சாதாரண மக்கள் காற்சட்டைகளுடனும், சேட்டுகளுடனும், சாறிகளுடனும் அப்பாவி விழிகளினால் என்னைப் பார்த்தபோது நான் வெட்கித் தலைகுனிந்ததை ஞாபகப்படுத்திப் பார்க்கின்றேன்.

நாம் கிளிநொச்சியை விட்டு வெளியேறும் வழியில் மிக அண்மையில் ஏ 9 வீதியில் நடத்தப்பட்டிருந்த வான்குண்டுத் தாக்குதலின் அகோரக் காட்சியையும் காணமுடிந்தது. அந்த காட்சியானது இனி கிளிநொச்சி வாழ்மக்களின் வாழ்கையில் எப்படியான மாற்றங்களை ஏற்படுத்தப் போகின்றது என்பதை எனக்கு உணர்த்தியது. எனது பாதுகாப்புக் காரணங்களுக்காக நான் வன்னியை விட்டு புறப்பட்டது சரியான முடிவுதான் எனத் தோன்றினாலும், அந்த மக்களைக் கைவிட்டுவிட்டோம் என்ற உணர்வு என் இதயத்தின் ஆழத்தில் இன்னமும் இருந்துகொண்டேயிருக்கின்றது. என்னோடு பணிபுரிந்த உள்ளுர் பணியாளர்களை வன்னியிலேயே விட்டுவிட்டு வன்னி மண்ணை விட்டு வெளியேறும்போது எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வையும் வலியையும் சொற்களால் விபரிக்க முடியவில்லை.

No comments: