சீமான் - சேரன் - அமீர் கைது செய்யப்படலாம் - திரையுலகம் இவர்களின் பின்னால் திரள வேண்டும் - சத்தியராஜ்

தமிழ் திரைப்பட இயக்குனர்களான சீமான், சேரன் மற்றும் அமீர் ஆகியோரை தமிழக காவற்துறையினர் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை ராமேஸ்வரத்தில் நடைபெற்ற தமிழ் திரையுலகின், ஈழ தமிழர்களுக்கு ஆதரவான பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில்,

இந்த இயக்குனர்கள், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை புகழ்ந்து பேசியதாகவும் இந்திய காங்கிரஸ் கட்சி குற்றம்சுமத்தியுள்ளது. அத்துடன் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கட்சி வலியுறுத்தியுள்ளது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று கைதுசெய்யப்பட்டதை அடுத்து, சீமான், சேரன், அமீர் ஆகியோரும் கைதுசெய்யப்படலாம் என தமிழக காவற்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இவர்களை கைதுசெய்ய முடியுமா என காவற்துறையினர் சட்டஆலோசனைகளை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

அதேநேரம் முழு தமிழ் திரையுலகமும் சீமான், அமீர் பின்னால் நின்று அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என நடிகர் சத்தியராஜ் கேட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் உரையாற்றிய அவர், தனது வீட்டில் நடைபெற்ற வைபவம் ஒன்று காரணமாக தன்னால், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் திரையுலகினர் நடத்திய பேரணியில் கலந்துகொள்ள முடியாது போனதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்காக சென்னையில் நாளை மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்ளாதவர்கள் குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப்பட்ட கருத்தை தான் வரவேற்பதாகவும் முதல்வர் கூறியது போல், போராட்டத்தில் கலந்துகொள்ளாதவர்கள் தமிழ் நாட்டில் இருக்க அருகதையற்றவர்கள் என சத்தியராஜ் கூறியுள்ளார் தான் இதனை கட்சி சார்பாகவோ அல்லது வேறு எவருக்கும் வால்பிடிப்பதற்காகவும் கூறவில்லை எனவும் தமிழன் என்ற உணர்வோடு தெரிவிப்பதாக சத்தியராஜ் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து கட்சி, மொழி இன பேதமின்றி அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். இயக்குனர் அமீர், சீமானை அரசியல் கட்சிகள் ஓரம் கட்டுகின்றனர். இவர்கள் பேசியது சரியா, தவறா என தான் கூறவில்லை எனவும் இந்த விடயத்தில் முழுத் திரையுலகமும் சீமான், அமீர் பின்னால் நின்று ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என சத்தியராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். ஏனெனில் தனக்கு தனிப்பட்ட முறையில் இதுபோன்ற பிரச்சினை எற்பட்ட போது திரையுலகம் தன்பின்னால் நிற்கவில்லை.

திராவிடர் கழகமும், விடுதலை சிறுத்தைகளும் தான் தனக்கு உதவி செய்ததாகவும் ஈழத்தமிழர் நலனுக்காகத்தான் அமீரும் சீமானும் இவ்வாறு பேசி உள்ளனர். எனவே இவர்கள் பின்னால் திரையுலகம் நிற்க வேண்டும் எனவும் சத்தியராஜ் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை மனிதச் சங்கிலி போராட்டம்:

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகள் சார்பில் நாளை சென்னையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது. நேற்று முன்தினம் (ஒக்21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மனிதச் சங்கிலி போராட்டம், சென்னையில் பெய்த கடும்மழை காரணமாக 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு எதிரில் நாளை பிற்பகல் 3 மணிக்கு மனிதச் சங்கிலி போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. முதல்வர் கருணாநிதி மனிதச் சங்கிலியை ஆரம்பித்து வைத்து, நிறைவடையும் வரை அதனை பார்வையிட உள்ளார்.

இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் அதிமுக மதிமுக, தேமுதிக பாஜக ஆகிய கட்சிகளைத் தவிர, தமிழகத்தில் உள்ள ஏனைய அனைத்துக் கட்சிகளும் கலந்து கொள்கின்றன. மேலும் திரையுலகத்தினர், பல்வேறு அமைப்புகள் மற்றும் எராளமான பொதுமக்கள் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தை முன்னிட்டு சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளதுடன் அதிகளவான காவற்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பிரிவினை வாதம் பேசுவோர் மீது தமிழக அரசு சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இல.கணேசன்:

பிரிவினை வாதம் பேசுவோர் மீது தமிழக அரசு சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவின் தமிழ் மாநில தலைவர் இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் இலங்கையில் இன்னலுறும் தமிழருக்காக இரக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. இதனை பயன்படுத்தி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும், தனித் தமிழ்நாடு கோரிக்கை விடுப்பவர்களும்,இலாம் அடைய முயற்சிப்பதால், தமிழக மக்கள் இந்த பிரச்சினையில் இருந்து விலகி நிற்ககூடும் என இல.கணேசன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். எனவே பிரிவினை வாதம் பேசுபவர்கள் இலங்கைத் தமிழர்கள் நலனுக்கு எதிராக செயல்படுபவர்கள் எனவும் தமிழக அரசு இவ்வாறான பேச்சுக்களை அலட்சியப்படுத்தாது, உறுதியுடள் செயல்பட்டு, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாஜகவின் தமிழ்மாநில தலைவர் கேட்டுள்ளார்.

No comments: