இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை

ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கவேண்டும்சர்ச்சைக்குரியவற்றை தவிர்க்க வேண்டும்
இலங்கையின் குடிமக்களான தமிழ்ப்பேசும் மக்கள் மீது இலங்கை அரசு மூர்க்கத்தனமாக நடத்தி வரும் விமான, தரைப்படை தாக்குதல்கள் மூலம் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள்.. பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரும் கூட சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்முயற்சியில் காந்தியடிகள் பிறந்த அக். 2ம் நாள் இலங்கைத் தமிழ் மக்களுக்கு தங்களுடைய மனிதாபிமான ஆதரவை தெரிவிக்கும் விதத்தில் தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்கள் அனைத்திலும் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்மக்களுக்கு எதிரான போரை இலங்கை அரசு உடனே நிறுத்தவேண்டும், இலங்கையில் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசின் படைக்கு இந்திய அரசு எந்த விதமான ஆயுதங்களையும் அனுப்பகூடாது.

அனுப்பிய ஆயுதங்களை உடனே திரும்பப்பெறவேண்டும். குண்டுதாக்குதலால் அகதிகளாக கொட்டும் மழையில் காடுகளில் தஞ்சம் புகுந்துள்ள மக்களுக்கு உணவு, உடை, மருந்து ஆகியவற்றை தாமதமின்றி அனுப்பவேண்டும்.

இந்திய மீனவர்களைச் சுட்டுக்கொல்வதை உடனே நிறுத்தவேண்டும். ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழக மக்களும் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த கோரிக்கைகளுக்கு முழுமையான ஆதரவைத் தந்து தமிழகத்தின் ஒற்றுமையை காந்தி பிறந்தநாளில் வெளிப்படுத்தினார்கள்.

இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இப்பொழுதும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

இதைப்போலவே தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தில் இதே கோரிக்கைகளை முன்வைத்து ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. இதில் இரண்டு வாரங்களுக்குள் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

அவ்வாறு எடுக்கத் தவறினால், தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிவிலக நேரிடும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த கோரிக்கையை தமிழக மக்கள் அனைவரும் ஒன்றுகூடி வலியுறுத்துவதற்காக அக்டோபர் 24ந் தேதி மனிதச்சங்கிலி போராட்டமும் இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படவேயில்லை. இலங்கை அரசு வெளியிட்டு வரும் பொறுப்பற்ற கருத்துக்கள் தமிழக மக்களை மேலும் கொதிப்படைய வைத்துள்ளது. இந்திய அரசு அளித்துவரும் இதற்கான விளக்கங்களும் மனநிறைவையும், நம்பிக்கையையும் தருவதாக இல்லை.

எனவே தமிழக மக்கள் தங்களது ஆத்திரத்தையும், கவலையையும் தெரிவிக்கும் வகையில் போராடிவருகின்றனர். மாணவர்கள், வணிகர்கள், வழக்குறிஞர்கள், மருத்துவத்துறையினர், திரைப்படக்கலைஞர்கள் என்று சமூகத்தின் அனைத்து பகுதியினரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
உலக தமிழர்கள் தமிழகத்தில் நிகழ்ந்து வரும் இந்த எழுச்சிக்கு பெரிய ஆதரவையும் வரவேற்பையும் அளித்து வருகிறார்கள். உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழர்கள் ஒன்றுகூடி இலங்கைத் தமிழர்களின் துயரத்தை எப்படியாவது போக்க வேண்டும் என்பதில் தங்களுடைய மேலான விருப்பங்களை வெளியிட்டு வருகிறார்கள்..

இந்த நிலையில் தமிழகத்தின் கடமையும், பொறுப்புணர்வும், மிகவும் கூடுதலாக தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும், சர்ச்சைக்குரிய பிரச்சனைகளை எழுப்பிட வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இதனை தவறாக சிலர் பயன்படுத்துவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது என்பதில் நமக்கு எச்சரிக்கை வேண்டும்.

இலங்கைத் தமிழ் மக்களை வைத்து தமிழகத்தின் அரசியல் கட்சிகள் தங்களுக்கிடையே அறிக்கைப்போர், விமர்சனப்போர் நடத்துவதை கைவிடவேண்டும். போர் மேகத்தின் குண்டு மழைக்கிடையே நொடிகள் தோறும் செத்துக்கொண்டிருக்கிற தமிழ்மக்களின் பெயரால் இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளவேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

போர் நிறுத்தம் செய்யப்பட்டு அமைதி திரும்பியப் பின் அரசியல் தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசு முயற்சி செய்யவேண்டும். இதுதான் இப்பொழுது இலங்கை தமிழ் மக்களுக்குத் தேவைப்படுகிறது.

இலங்கை வாழ் தமிழ் மக்களை காப்பாற்ற தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒன்றுபட்ட கருத்துடன், ஒருமித்துக்குரல் கொடுக்க வேண்டுமென்று கம்யூனிஸ்ட் கட்சி அனைவரையும் கேட்டுக்கொள்கிறது. இந்தப் பிரச்சனையை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவா? அல்லது எதிர்ப்பா?

என்ற சர்ச்சையாக மாற்றுவதை தவிர்க்கவேண்டுமென்று சம்பந்தப்பட்டவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் தமிழகத்தின் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படாத வகையிலும், இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவி செய்யும் விதத்திலும் அமையவேண்டும் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்த விரும்புகிறது..

சில அரசியல் கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டத்திலும் மனிதச் சங்கிலி போராட்டத்திலும் தமிழகத்தின் தனித்த அரசியல் சூழ்நிலையால் கலந்து கொள்ள முடியாமல் போனாலும், இந்தப் பிரச்சனையை தீர்ப்பதில் அவர்களும் முழுமுயற்சி எடுக்கவேண்டுமென்று கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

(தா.பாண்டியன்)
மரிநலச் செயலாளர்

No comments: