வெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ் அரசியற் பெண் கைதிகள் பாலியல் ரீதியில் இம்சிக்கப்படுகின்றனர்

வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் பெண் கைதிகள் பல்வேறு கஷ்டங்கள் துன்பங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

இப்பெண்கைதிகளை ஆண் சிறைக்ககாவலர்களே உடற்சோதனை செய்து வருவதாகவும் இதனால் தாம் பாலியல் ரீதியில் இம்சிக்கப்படுவதாகவும், ஏனைய கைதிகள் முன்பு அவமானப்படுத்தப்படுவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

600 பெண் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு பிரிவுகளில் 40 தமிழ் அரசியல் பெண் கைதிகள் அடிப்படை வசதிகள் இன்றித் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது தவிர மலசலகூடம் மற்றும் பெண்களுக்கான சுகாதார வசதிகள் இன்றி தாம் அவதியுறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊறவினர்கள் இவர்களைப் பார்வையிடச் சென்றால்; ஐந்து நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும், அவர்கள் கொண்டு செல்லும் உணவுப் பொருட்களைத் திருப்பி அனுப்பி விடுவதாகவும் தெரிய வருகிறது.

பெண் சிறை அதிகாரி ஒருவர் இவர்களைச் சில சமயங்களில் சித்திரவதையும் செய்கிறார். அத்தோடு இப்பெண் கைதிகள் பழிவாங்கவும் படுகின்றனர். இந்தத் தமிழ் பெண் அரசியல் கைதிகளுள் நாவல்வர் பத்து வருடங்களுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் நான்கு பெண் கைதிகள் குழந்தைகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்துக்கு இவர்கள் குழந்தையுடன் செல்லும் போது குழந்தையைப் போர்த்துவதற்குத் துணியின்றி பொலித்தீனால் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயங்கள் தொடர்பாக இப்பெண் தமிழ்அரசியற் கைதிகள் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்புப் பிரதியமைச்சர் வீ.புத்திரசிகாமணிக்குப் பல தடவைகள் கடிதமூலம் முறையிட்ட போதும் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவி;ல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தமது உறவினர்கள் மூலம் பெண்கள் அமைப்புக்களுக்கும் மனித உரிமை அமைப்புக்களுக்கும் இது பற்றித் தெரிவித்ததாகவும் ஆனால் தாம் துன்புறுத்தப்படுவது தொடர்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: