விடுதலைப் புலிகள் இன்றி அரசியல் தீர்வு சாத்தியமா? - ஜெஹான் பெரேரா கேள்வி

விடுதலைப் புலிகளுடன் கலந்தாலோசிக்காமல் முன்வைக்கப்படும் அரசியல் தீர்வுத்திட்டத்தைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமானது என தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா கொழும்பு ஊடகமொன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இனப்பிரச்சினை அரசியல் ரீதியாகத் தீர்க்கப்படும் என சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,
விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்த பின்னரே இவ்வாறான தீர்வொன்றை முன்வைக்கத் தீர்மானித்திருப்பதாகக் கூறியிருப்பதை ஜெஹான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் தீர்வு தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் கலந்தாலோசிக்காமல், கொள்கை ரீதியில் தம்முடனிருக்கும் சிங்களத் தேசியவாதக் கட்சிகளான ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய மற்றும் அரசாங்கத்துக்கு ஆதரவான தமிழ் கட்சிகளான ஈ.பி.டி.பி., தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியோரை இணைத்துக்கொண்டு அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பது தெரியவருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டரை வருட காலத்தின் பின்னர் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்படுமென ஜனாதிபதி கூறியிருப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அரசாங்கப் படைகள் கிளிநொச்சியின் வாயில் நிற்கும்போதே அவர் இவ்வாறு கூறியிருப்பதாக ஜெஹான் பெரேரா தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார். 'பெரும்பான்மை' தீர்வு காலத்துக்குக் காலம் சர்வகட்சி மாநாடுகள் கூட்டப்பட்டபோதும் அவற்றின் மூலம் தீர்வொன்று முன்வைக்கப்படாததுடன், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவால் முன்வைக்கப்பட்ட 13வது திருத்தச்சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்துவது பற்றிய தீர்வு யோசைனை இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லையெனச் சுட்டிக்காட்டியிருக்கும் ஜெஹான் பெரேரா, அண்மையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டிற்கு பெரிய தமிழ் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைக்கப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளார். கடந்த சில காலங்களாக சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணித்துவரும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, சர்வகட்சி மாநாடு உலகத்தை ஏமாற்றும் சூழ்ச்சியெனக் கூறி கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டைப் புறக்கணித்திருந்தது. எதிர்த்தரப்பினருடனும், தமக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களுடனும் பேச்சுக்களை நடத்தி தீர்வொன்றைக் கொண்டுவருவதற்குப் பதிலாகத் தன்னுடன் சேர்ந்திருக்கும் கட்சிகளுடன் மட்டும் கலந்தாலோசித்து தீர்வொன்றைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சிப்பதையே இது காட்டிநிற்பதாக ஜெஹான் பெரேரா குறிப்பிடுகிறார். பேரம்பேசும் சக்தி தற்பொழுது நடைமுறையில் இருக்கும் பெரும்பான்மையின மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் பொறிமுறையை தமிழர்கள் அடிப்படைப் பிரச்சினையாகப் பார்ப்பதாகவும், அப்படி இருக்கும்போது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் புறந்தள்ளிவிட்டு பெரும்பான்மை சிங்களக் கட்சிகளுடன் இணைந்து முன்வைக்கும் தீர்வை தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே எனவும் அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் இல்லாமல் சிங்களத் தேசியவாதக் கட்சிகளை மட்டும் இணைந்துகொண்டு முன்வைக்கப்படும் அரசியல் தீர்வை குறைந்தபட்சமேனும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வர்கள் என்பது சந்தேகமேயெனவும் ஜெஹான் பெரேரா குறிப்பிட்டுள்ளார். தமிழ் போராட்ட வரலாறு முழுவதும் சிங்களப் பெரும்பான்மைக்கான ஆதிக்கத்தைக் கையாள்வதாகவே இருந்திருப்பதாகவும், இதனால்தான் விடுதலைப் புலிகள் தொடர்பாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு இருந்துவந்ததாகவும் அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. �விடுதலைப் புலிகள் கொண்டிருக்கும் இராணுவப் பலமே அவர்களின் பிரதான பேரம் பேசும் சக்தியாகக் கருதப்படுகிறது. இது வேறெந்த தமிழ் கட்சிகளிடமும் கிடையாது. ஈ.பி.டி.பி., ரி.எம்.வி.பி. ஆகிய கட்சிகள் தங்களுடைய இருப்புக்கே அரசாங்கத்தை முழுமையாக நம்பியிருக்கும் நிலையில் அவர்களிடம் பேரம் பேசும் சக்தி சிறிதேனும் இருப்பதாகக் கொள்ளமுடியாது� என ஜெஹான் பெரேரா தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அரசபக்க நியாயம் சமாதானப் பேச்சுவார்த்தைகள் சாத்தியமில்லையென அரசாங்கம் நம்புவதற்கு சில நியாயமான காரணங்களும் உண்டு எனக் குறிப்பிடும் அவர், அது சிங்கள தேசியவாதப் பார்வை மட்டுமன்றி விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகக் கையாழும் அரசாங்கத்தின் முடிவுக்கு ஆதரவாக இருந்துவரும் சர்வதேசத்தின் பார்வையும் இதுவாகவே இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். 2003ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு நோர்வேயின் அனுசரணையுடன் அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பின்னணிப் பலத்துடன் போர்நிறுத்த உடன்படிக்கை முழுமையாக அமுலிலிருந்த காலப்பகுதியே பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வுக்கு சிறந்த காலமாக விளங்கியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் தனியான அரசைப் பெற்றுக்கொள்ளவேண்டுமென்ற நோக்கோடு அந்த சமாதான முயற்சிகளை விடுதலைப் புலிகள் குறைத்து மதிப்பிட்டிருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுடன் போர்நிறுத்த உடன்படிக்கை செய்துகொண்ட கட்சி தற்பொழுது எதிர்க்கட்சியில் இருப்பதுடன், இரண்டரை வருடங்களுக்கும் மேலாக வடக்கு, கிழக்கில் யுத்தம் முன்னெடுக்கப்படுவதாகவும், 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகிக் கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், 2003ஆம் ஆண்டு மார்ச்சில் போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகப் போவதாகவும், ஜுலை மாதம் டோக்கியோ உதவி வழங்கும் நாடுகளில் கலந்துகொள்ளமாட்டோமெனவும் அறிவித்ததன் மூலம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைப் புலிகள் போர்நிறுத்த உடன்படிக்கையின் அத்திவாரத்தை ஆட்டங்காணச் செய்துவிட்டனர் எனவும் ஜெஹான் பெரேரா தனது கட்டுரையில் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: