புலிகளை ஒழிப்பது கஷ்டம்-ராணுவ தீர்வு சாத்தியமல்ல: அமெரிக்கா

விடுதலைப் புலிகளை அழிக்க முடியாது. அவர்களை அழித்து விட்டுத்தான் இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று அதிபர் ராஜபக்சே கூறுவதை ஏற்க முடியாது.

ராணுவ ரீதியிலான தீர்வு மிகக் கடினம். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளாக் கூறியுள்ளார்.


சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், விடுதலைப் புலிகள் முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே பேச்சுவார்த்தை நடத்த முடியும் என இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியிருப்பதை ஏற்க முடியாது. அது சாத்தியமும் அல்ல.

ராணுவத் தீர்வு என்பது மிக மிக கடினமானது. இலங்கையின் வடக்கு முழுவதையும் ராணுவம் பிடித்தாலும் கூட, குறைந்தது ஆயிரம் விடுதலைப் புலிகளாவது தலைமறைவாகக் கூடும். அவர்களது கொரில்லாத் தாக்குதலை தவிர்க்க முடியாது என இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும்.

அரசியல் சீர்திருத்தம் தொடர்பான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கமிட்டியின் பரிந்துரைகளை ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கடந்த 25 ஆண்டுகளில் இலங்கை அரசு செய்த பெரிய தவறு, சிங்கள கட்சிகளையும் இதில் இணைத்து ஒப்பந்தம் செய்யாததுதான்.

அரசியல் ரீதியிலான தீர்வுக்கு இலங்கை அரசு முயன்றால் விடுதலைப் புலிகளை மேலும் வலுவிழக்கச் செய்யமுடியும் என அமெரிக்கா நம்புகிறது. அரசியல் ரீதியிலான தீர்வால் மூன்று வகையான பலன்கள் கிடைக்கும்.

ஒன்று, வன்னி பகுதியில், அகதிகளாக உள்ள 2 லட்சம் தமிழர்களும் தெற்கிலும் சுதந்திரமாக வசிக்க வகை ஏற்படும். தங்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள அவர்களால் முடியும்.

2வது, இலங்கைத் தமிழர்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் தாங்கள்தான் என்று விடுதலைப் புலிகளால் கூற முடியாது.

3வது, விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்யாதீர்கள் என வெளிநாடுகளில் உள்ள தமிழர்களைக் கோர முடியும்.

அரசியல் ரீதியிலான தீர்வின் மூலம் மனித உரிமை சிக்கலையும் தவிர்க்க முடியும். இதுதான் இலங்கைத் தமிழர்களை மிகப் பெரிய அளவில் பாதித்துள்ளது.

இலங்கை விவகாரத்தைத் தீர்க்க இந்தியாவும், அமெரிக்காவும் சிறந்த முறையில் பங்காற்ற முடியும். தங்களது அனுபவங்களை இதில் பயன்படுத்த முடியும்.

இந்தியா தலையிட வேண்டும்:

இந்தியத் தலையீட்டின் மூலம் இலங்கைப் பிரச்சினைக்கு நிச்சயம் நல்லதொரு தீர்வைக் காண முடியும் என அமெரிக்கா நம்புகிறது.

இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ தீர்வு சாத்தியமல்ல என்று அமெரிக்கா உறுதியாக நம்புகிறது. சமீபத்தில், இலங்கைக்கான ராணுவ உதவிகளை அமெரிக்க அரசு முற்றிலும் நிறுத்தி வைத்தது என்பதை நினைவு கூர விரும்புகிறேன்.

அங்கு நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்த புகார்கள் மற்றும் சிறார் வீரர்கள் குறித்து வெளியான தகவல்களைத்தொடர்ந்து இந்தநடவடிக்கையை அமெரிக்கா எடுத்தது. இருப்பினும் தீவிரவாதத்தை எதிர்த்து இலங்கை ராணுவம் போராட முன்பு அமெரிக்கா உதவி செய்தது என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறேன். இதற்காக இலங்கைக்கு கடல் கண்காணிப்புக்கான ரேடார் அமைப்பு மற்றும் 10 படகுகளை இலங்கை கடற்படைக்கு அமெரிக்கா வழங்கியது.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அமெரிக்காவும், அதைத் தொடர்ந்து பிற நாடுகளும் தடை விதித்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு வரும் நிதியுதவி கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் அவர்களால் முன்பு போல ஆயுதங்கள் வாங்க முடியவில்லை. இது சமீபத்திய அவர்களது தோல்வியின் மூலம் தெளிவாகியுள்ளது.

தற்போது அமெரிக்காவிலிருந்து இலங்கைக்குப் போகும் உதவிகள் அனைத்துமே மனிதாபிமான நோக்கில்தான் உள்ளன. அல்லது பொருளாதார, அரசியல் கட்டமைப்பை மேம்படுத்தும் உதவிகளாகவே உள்ளன.

இந்த ஆண்டு மட்டும் அமெரிக்கா 32.7 மில்லியன் மதிப்பிலான உணவு மற்றும் பிற பொருட்ளை இலங்கைக்கு அனுப்பியுள்ளது என்றார் பிளாக்.

No comments: