மீண்டும் இந்த 'தவறை' செய்வோம்!: சீமான்-அமீர்,இந்தப் பிள்ளைகள் எந்தத் தவறும் செய்யவில்லை: பாரதிராஜா

பிரிவினைவாதத்தைத் தூண்டும்படி நாங்கள் பேசவில்லை. இலங்கையில் செத்துக் கொண்டிருக்கும் எங்கள் உறவுகளுக்காக மனிதாபிமான அடிப்படையில்தான் குரல் கொடுத்தோம். அது தவறென்றால், அந்தத் தவறை மீண்டும் மீண்டும் செய்வோம் என்று இயக்குனர் அமீர் கூறினார்.

ராமேஸ்வரத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக திரையுலகம் நடத்திய பேரணி மற்றும் மாநாட்டில் பிரிவினைவாதத்தைத் தூண்டும் விதத்தில் பேசியதாக இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் மீது வழக்குப் பதிவு செய்து நேற்றும் மாலை கைது செய்தது போலீஸ்.

கைதாகி சிறைக்குச் செல்லும்முன் நிருபர்களிடம் அமீர் கூறியதாவது:

இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையிலோ, பிரிவினையைத் தூண்டும் விதத்திலோ நாங்கள் எதுவும் பேசவில்லை. அது எங்களுக்குத் தேவையில்லை. மனிதாபிமான அடிப்படையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளித்துப் பேசினோம். இந்தக் கொடுமைக்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்காமல் வேறு யார் குரல் கொடுப்பார்கள்...

தெருவில் இருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால், அதைப் பார்த்துவிட்டு ஒரு நாய் கூட, இந்த சண்டை வேண்டாம் என்ற அர்த்தத்துடன் குரல் கொடுப்பதைப் பார்க்கலாம். அப்படி நாய்களுக்கு இருக்கும் உணர்வு கூடவா மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.

இலங்கையில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிற எங்கள் உறவுகளுக்காக மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் எழுப்பிய குரல் தவறென்றால், அந்தத் தவறைத் தொடர்ந்து நாங்கள் செய்துகொண்டே இருப்போம், என்றார் அமீர்.

உடனிருந்த சீமான் கூறியதாவது:

என் இன விடுதலைக்காக வீரத் தமிழ் மறவர்களாக சிறை செல்கிறோம்.

உலகில் எந்த நாட்டிலும் தன் இனம் அழிவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்க்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த அவலம். நானும் என் தம்பி அமீரும் ஈழ மக்களுக்கு ஆதரவளித்துப் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. எங்கள் உறவுகளுக்காக நாங்கள் குரல் கொடுத்தோம்.

உலகில் கோட்டை கட்டி ஆண்ட முதல் இனம், இன்று மண்டபம் அகதி முகாமில் கோணிப்பைக்குள் சுருண்டு கிடக்கிறது. ஈ, எறும்புக்கும் தானம் செய்வதற்காக அரிசி மாவில் கோலம் போட்ட எம் குல மக்கள் இன்று கால்படி அரிசிக்கு வழியின்றி கையேந்தி நிற்கிறார்கள். இந்த அவலத்தை கண்டும் காணாமல் இருக்கச் சொல்கிறீர்களா... தமிழர்களுக்குக் குரல் கொடுத்த பெருமையுடன் சிறைக்குச் செல்கிறோம்.

எங்கள் பேச்சு சரியா தவறா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும், தலைவர்கள் அல்ல என்றார் சீமான்.

இந்தப் பிள்ளைகள் எந்தத் தவறும் செய்யவில்லை: பாரதிராஜா

இந்தப் பிள்ளைகள் (சீமான், அமீர்) எந்தத் தவறும் செய்யவில்லை. இவர்கள் விடுதலையாகும் வரை தமிழ் இன உணர்வுள்ள எந்த இயக்குவரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாரதிராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த இரண்டு பிள்ளைகளும் எந்தத் தவறும் செய்யவில்லை. பதவிக்காக இவர்கள் போராடவில்லை. தமிழர்களுக்காக, தமிழ் உணர்வுடன் போராடினார்கள்.

உலகில் எந்த நாட்டிலும் ராமேஸ்வரம் போராட்டத்தைப் போல திரைப்பட இயக்குநர்கள் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியதில்லை. இவர்கள் இருவரும் சிறையிலிருந்து விடுதலையாகும் வரை தமிழ் இன உணர்வுள்ள எந்த இயக்குநரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றார்.

No comments: