வலிந்த தாக்குதல் அச்சத்தில் சிறீலங்காப் படையினர் - தமிழீழ படைத்துறைப் பேச்சாளர் இ.இளந்திரையன்

கிளிநொச்சியைக் கைப்பற்றும் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சிறீலங்காப் படையினர் இப்போது இரவு பகலாக அச்சத்துடன் காணப்படுகின்றமையினை அவதானிக்க முடிகிறது.

எப்போதும் விடுதலைப் புலிகள் ஒரு வலிந்த தாக்குதலை தங்கள் மீது மேற்கொள்ளலாம் கரும்புலிகள் திடீரென பாயலாம் என்கிற அச்சமும் எதிர்பார்ப்பும் தற்போது படையினர் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகிறது

என விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இ.இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் விசுவமடுவில் நடைபெற்ற அநுராதபுரம் விமானப்படைத்தளத்தின் அதியுயர் பாதுகாப்பு வியூகத்தினுள் புகுந்து எல்லாளன் படை நடவடிக்கையினை வெற்றிகரமாக மேற்கொண்டு தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த 21 சிறப்புக் கரும்புலிகளின் ஓராண்டு நினைவு நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வன்னியைக் கைப்பற்றும் படை நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கும் தளபதிகளில் சிலர் ஏற்கனவே விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளின் போது தோல்வியுற்று பின்வாங்கியவர்கள். இவர்களுக்கு இந்த அச்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாததே எனவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சியின் மேற்குப்பகுதிகளில் படைநடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் படையினர் தற்போது குழம்பிய நிலையிலுள்ளனர். படைத்தரப்பினர் நினைத்தது போல் ஒரு காலவரையறைக்குள் வன்னியை ஆக்கிரமிக்கும் நிகழச்சி நிரல் விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்தாக்குதல்களால் முடியதாது போயுள்ளது.

தங்களது இயலாமை காரணமாகவே மக்கள் வாழ்விடங்களின் மீது எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு அவர்களை இடம்பெயரச்செய்து வருகின்றார்கள். இன்று மக்கள் இடம்பெயர்ந்து சொல்லொணா துன்பங்களை அனுபவித்த வருகின்றார்கள்.

வியட்நாம் விடுதலையடையும் இறுதித் தருணத்திலும் அங்குள்ள மக்கள் இவ்வாறானதோர் துயரத்தை அனுபவித்தமையினை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். நம்பிக்கையும் விடுதலை மீதான பற்றுறுதியுமே எங்கள் விடுதலையை விரைவாக்கும் எனவும் அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

இந்நிகழ்வு விசுவமடு மாவீரர் மண்டபத்தில் விசுவமடுக்கோட்ட மாவீரர் செயற்பாட்டுக்குழுவின் தலைவர் திரு. ஞானம் தலைமையில் இடம்பெற்றது. பொதுச்சுடரேற்றப்;பட்டு, தேசியக்கொடியேற்றப்பட்டு வீரச்சாவடைந்த 21 கரும்புலி மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு ஈகச்சுடரேற்றி மலர் மாலைகள் சூட்டப்பட்டு பொது மக்களால் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. வன்னியில் மேலும் பல பகுதிகளிலும் இக் கரும்புலிகளுக்கு நினைவு கூரும் நிகழ்வு இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://cache.daylife.com/imageserve/06L3fohc5K9vw/610x.jpg

No comments: