வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இரண்டு கடற்றொழிலாளர்களை காணவில்லை


யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட மீன்பிடிப் படகுகள் மீது சிறிலங்கா கடற்படையினர் நேற்று இரவு நடத்திய தாக்குதலில் இரண்டு தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.

நேற்று புதன்கிழமை இரவு தொழிலில் ஈடுபட்டிருந்த வத்திராயனைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான பாலசுப்பிரமணியம் பாசம், வத்திராயனைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சயந்தன் (வயது 25) ஆகிய இரண்டு கடற்றொழிலாளர்களே காணாமல் போனவர்கள் ஆவர்.

இது தொடர்பில் ஏனைய கடற்றொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில்;

தாம் தொழிலில் ஈடுபட்ட வேளை திடீரென வந்த டோறா பீரங்கிப் படகுகள் தாக்குதல் நடத்தியதாகவும் அதனால் தாங்கள் வலைகளை வெட்டிவிட்டு கரை திரும்பியதாகவும் தெரிவித்தனர்.

காணாமல் போன கடற்றொழிலாளர்களின் படகும் தமக்கு அருகிலேயே தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் காணாமல் போன இருவர் தொடர்பில் தமக்கு ஏதும் தெரியவில்லை எனவும் ஏனைய கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசம் அறிக்கை:

தமிழீழக் கடற்பரப்பில் தமது அன்றாட வாழ்வுக்காக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற அப்பாவிக் கடற்றொழிலாளர்களின் உயிர்களையும் கடற்றொழில் உபகரணங்களையும், பாதுகாக்க உலகம் சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் நடத்தி வருகின்ற தாக்குதலினால் தொடர்ச்சியாக கடற்றொழிலாளர்கள் கொல்லப்படுவதும் காணாமல் போவதும் தொழில் உபகரணங்கள் அழிக்கப்படுவதும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இதனால் தொடர்ச்சியாக கடற்படையினர் நடத்தும் தாக்குதலால் எமது கடற்றொழிலாளிகள் முற்றாகப் பாதிக்கப்பட்டு அன்றாட வருவாயினை எட்ட முடியாமல் செல்லும் அபாயத்தினை எதிர்கொள்வதை நாங்கள் வன்மையான கண்டிக்கின்றோம்.

கடற்றொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்துபவர்கள் மட்டுமின்றி அனைவரும் குரல் கொடுத்து சிறிலங்கா கடற்படையினரைக் கண்டித்து எமது கடற்றொழிலாளர் சமூகத்தினை அழிவில் இருந்து காப்பாற்ற முன்வரவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: