தகுந்த காரணமின்றி கொழும்பு செல்லும் தமிழர்களை மதவாச்சியில் திருப்பி அனுப்பும் படையினர்


வடக்கிலிருந்து கொழும்புக்கும் தென்பகுதிக்கும் செல்வோரை மதவாச்சி இராணுவ சோதனை நிலையத்தில் வைத்துப் படையினர் காரணம் எதுவுமின்றி தமிழ் பயணிகள் கொழும்புக்குச் செல்ல முடியாதெனக் கூறி அவர்களைத் தடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சிவசக்தி ஆனந்தன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில்,

மதவாச்சி ரயில் நிலையத்திலுள்ள இராணுவ சோதனை நிலையத்திலிருக்கும் படையினரால் வடபகுதியிலிருந்து செல்லும் தமிழ் மக்கள் பல்வேறு விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படுகின்றனர்.

இதன்போது கொழும்புக்கு அல்லது தென்பகுதிக்குச் செல்வதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்படுகிறது. அதற்குரிய தகுந்த அத்தாட்சிகளைக் காண்பிக்காதவர்கள் தொடர்ந்து பயணம் செய்ய முடியாது திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனால் ஏமாற்றமடைந்து வவுனியாவுக்குத் திரும்பி வந்த பலர் என்னிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

தலைநகர் கொழும்பிற்குப் பல தேவைகளுக்கும் மக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. வழமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் பயணிகளை அனுமதிக்க வேண்டும். சுதந்திரமான நடமாட்டத்திற்கு இடையூறு செய்வது மனித உரிமை மீறலாகும் எனவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி - தினக்குரல்

No comments: