வங்கதேசத்தை மாத்திரம் இந்தியா விடுவித்தது எப்படி? கருணாநிதி கேள்வி?

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கத்தில் தாம் செயல்படவில்லை என தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார்.

போரை நிறுத்துவது சாத்தியமில்லை என இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியிருப்பது குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி பதிலளித்துள்ள தமிழக முதல்வர்,

காலையில் வெளியான பத்திரிகைகளில் அவ்வாறு செய்தி வந்தாகவும் எனினும் மாலை பத்திரிகைகளில் அவர் அப்படிக் கூறவில்லை என செய்தி வெளியிடப்பட்டுள்ளது எனவும் கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கை விடயத்தில் தமிழக அனைத்து கட்சிகள் மேற்கொண்டு தீர்மானத்தின் அடிப்படையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தாமாக முன்வந்து தமது பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர். அவர்கள் எவரையும் கட்சி வலியுறுத்தி இதனை செய்யவில்லை எனவும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் சமாதானம் ஏற்பட இ;ந்திய மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி பதிலளித்த தமிழக முதல்வர், இலங்கையில் அமைதி ஏற்படுத்துவதற்கு எவ்வாறான வழிமுறையைக் கையாள வேண்டும் என்பதை இந்திய மத்திய அரசுக்குத் அறிந்துள்ளதாகவும் எனவே, எந்த முறையைக் கையாள்வது என்பதை மத்திய அரசே தீர்மானித்து அதனை செயற்படுத்த வேண்டும். இலங்கையில் படுகொலை செய்யப்படும் தமிழர்களை இந்திய மத்திய அரசாங்கம் பாதுகாக்கும் என தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

இலங்கை என்பது வெளிநாடு. எனவே, அந்த நாட்டின் பிரச்சினையில் எப்படி இந்தியா தலையிட முடியும் என கேள்வி எழுப்பபடுகிறதே என வினவவிய போது, வங்கதேசத்தை மாத்திரம் இந்தியா விடுவித்தது எப்படி? என கருணாநிதி கேள்வி எழுப்பினார், போருக்குப் போர் - துப்பாக்கிக்குப் துப்பாக்கி என்ற வகையில் தீர்வு காண வேண்டும் எனச் தாம் கூறவில்லை எனவும் இலங்கையில் ஏற்படும் சமாதானம் மூலம், அங்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் எனவும் தமிழக முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளாhர்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதே? என எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி இந்தப் பிரச்சினையில் விடுதலைப் புலிகளை காப்பாற்றுவதோ, அவர்களுக்கு உதவுவதோ தமது நோக்கம் அல்ல என குறிப்பிட்டுள்ளார்.

திமுகவின் மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு உண்டா என செய்தியாளர் ஒருவர் வினவிய போது, அனைத்துக் கட்சி கூட்டத்தையே கபட நாடகம் என சிலர் கூறியுள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு எப்படி அழைப்பு விடுக்க முடியும்? அவர்கள் சங்கிலிக்குள் வர மாட்டார்கள் என தமிழக முதல்வர் பதிலளித்தார்.

இந்த நிலையில் இந்திய மத்திய அரசாங்கத்திடம் இருந்து இலங்கை பிரச்சினைக்பு சாதகமான முடிவுக்கு கிடைக்காது போனால், திமுகவின் உயர் மட்டக் குழுவைக் கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும். இந்தப் பிரச்சினையில் காங்கிரஸ் கூட்டணிக்கு பாதிப்பு வரும் என நினைக்கவில்லை. தமிழனுக்கு வந்த பாதிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே தமிழக அரசின் கோரிக்கை எனவும் தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

No comments: